தீபாவளியை முன்னிட்டு பலரும் தங்கள் வீடுகளில் இனிப்பு வகைகள் செய்வார்கள் அந்த வகையில் ரேஷன் அரிசி கொண்டு சுவையான அதிரசம் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
ஒரு கப் ரேஷன் பச்சரிசி,
மருந்து கலக்காத பாகு வெல்லம்
அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி
ஒரு டேபிள் ஸ்பூன் எள்ளு
செய்முறை
ஒரு கப் அளவில் எடுத்த ரேஷன் பச்சரிசியை நன்றாக கழுவி, சுமார் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி நன்றாக ஊறியதும் அதனை வடிகட்டிய பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், மாவில் சற்று ஈரப்பதம் இருக்கும் வகையில் நன்றாக அழுத்த வேண்டும். இதையடுத்து மருந்து கலக்காத பாகு வெல்லத்தை இடித்து, மாவு எடுத்த கப்பின் முக்கால் கப் அளவிற்கு எடுக்க வேண்டும். பின்னர், அதன் கால் கப் அளவிற்கு தண்ணீர் எடுத்து அடுப்பில் போட்ட வெல்லம் மீது ஊற்றி, வெல்லம் கரையும் வரை காத்திருக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி மீண்டும் அடுப்பில் நன்றாக சூடு படுத்த வேண்டும். பாகு பதத்திற்கு பொங்கி வந்ததும், அடுப்பை அனைத்து விட வேண்டும். இதனை பரிசோதிக்க சிறிது பாகுவை எடுத்து நீரில் போட்டு உருட்டி பார்க்க வேண்டும். பாகு உருட்டுவதற்கு வந்தால் பதம் சரியாக இருப்பதாக அர்த்தம். அதன் பின்னர், ஏலக்காய் பொடி மற்றும் எள்ளு சேர்த்து கலந்த மாவுடன், பாகுவை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி கிளற வேண்டும். இந்தக் கலவையை இரண்டு நாள்கள் கழித்து அதிரசம் சுடும் அளவு இறுகிய பின்னர், உருண்டையாக எடுத்து அதனை வாழையில் போட்டு தட்டி எண்ணெயில் சுட்டு எடுத்தால் சுவையான அதிரசம் தயாராகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“