சிவப்பரிசியில் சத்து நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. புரதம், நார்ச்சத்து போன்றவைகள் அதிகம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். குறிப்பாக சிவப்பரிசி சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த சிவப்பரிசியில் ரொட்டி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். ‘
தேவையான பொருட்கள்
சிவப்பரிசி – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
சீரகம் – 1 டீஸ்பூன்
கேரட் – 1
தேங்காய்த்துருவல் – 5 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். சிவப்பரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சிவப்பரிசி மாவு தயார் செய்து கொள்ளவும்.
இப்போது 1 பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாகப் கலந்து அதில் சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை அரை மணி நேரம் ஈர துணி வைத்து மூடி வைக்கவும். பின்னர் சிறு சிறு உருண்டையாக்கி வட்டமாகத் தட்டி வைக்கவும். இப்போது அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் வட்டமாகத் தட்டி வைத்த ரொட்டியை போட்டு சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான சத்தான சிவப்பரிசி ரொட்டி ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/