பாரம்பரிய உணவுகள் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தருகின்றன. கேழ்வரகு, கம்பு, சோளம், கருப்பு கவுனி, சிவப்பு அரிசி ஆகியவைகள் உடலுக்கு நன்மை தருகின்றன. அந்த வகையில் சிவப்பு அரிசி காரப் பணியாரம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி - 1 கப்
உளுந்து - அரை கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும். சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து - வெந்தயத்தை தனியாகவும் 3 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுக்கவும். நன்றாக ஊறியதும் இரண்டையும் அரைத்து தேவையான உப்பு சேர்த்து கலக்கி 4 மணி நேரம் புளிக்கவிடவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் போட்டு தாளித்து பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். இதன் சூடு ஆறியதும் பணியாரம் சுடும் முன் இந்த கலவையை போட்டு கலக்கி வைக்கவும்.
அடுத்தாக, அடுப்பில் பணியாரக் கல் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி வேகவிடவும். இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும். இப்போது காரச் சட்னியுடன் சூடான சிவப்பு அரிசி காரப் பணியாரத்தை வைத்து பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“