வழக்கமான பிரியாணி மசாலாப் பொடிகள் எதுவும் சேர்க்காமல், ஒரு மைல்டான மற்றும் சுவையான வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்று பார்ப்போம். ஆர்.கே ரெசிபீஸ் பவுல் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது போல இது ஒருமுறை செய்து பார்த்தால், மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும்.
தேவையான பொருட்கள்:
புதினா
கொத்தமல்லி
பிரிஞ்சி இலை: 2
வெங்காயம்: 2
தக்காளி: 1
உங்களுக்கு பிடித்த காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி போன்றவை)
பச்சை மிளகாய்: 2
அரிசி: 1 கப்
நல்லெண்ணெய்: 2 டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை:
ஒரு கைப்பிடி புதினா மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து விழுதாக வைத்துக் கொள்ளவும். வேறு எந்த மசாலாப் பொடியும் சேர்க்க வேண்டாம். குக்கரில் இரண்டு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் இரண்டு பிரிஞ்சி இலைகள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்து வைத்த புதினா-கொத்தமல்லி விழுதைச் சேர்க்கவும். பச்சையாக அரைத்திருப்பதால், பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.
உங்களிடம் இருக்கும் விருப்பமான காய்கறிகளை (கேரட், பீன்ஸ், பட்டாணி போன்றவை) மற்றும் ஒரு தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். இந்த பிரியாணிக்கு பச்சை மிளகாயின் காரம்தான் பிரதான சுவையைத் தரும். மசாலாவில் காரம் போதவில்லை என்றால், மேலும் இரண்டு பச்சை மிளகாயை கீறிச் சேர்க்கலாம்.
ஒரு கப் சீரக சம்பா அரிசிக்கு, ஒன்றே முக்கால் கப் தண்ணீர் என்ற விகிதத்தில் ஊற்றவும். (கர்நாடகா ஹோட்டல்களில் இந்த பிரியாணியை சாதா அரிசியிலும் செய்வார்கள்). அரிசியும் தண்ணீரும் சமமாக வந்ததும், குக்கர் மூடியை போட்டு விசில் வைத்து, அடுப்பை ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேகவிடவும்.
அடுப்பை அணைத்து, ஆவி அடங்கியதும் குக்கரைத் திறக்கவும். சுவையான, உதிரியான வெஜிடபிள் பிரியாணி தயாராக இருக்கும். இந்த பிரியாணி சுவையாக இருப்பதுடன், உதிரியாகவும் வரும். ஒருமுறை இதை முயற்சி செய்து பாருங்கள்.