ஆரோக்கிய உணவு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. சாப்பாடு முதல் ஸ்நாக்ஸ் வரை வீடுகளில் சமைத்து சாப்பிட்டால் நல்லது. அன்றாடம் மாலை நேரத்தில் டீ உடன் ஸ்நாக்ஸ் வைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். குழந்தைகளும் பள்ளி முடிந்து வந்து ஸ்நாக்ஸ் சாப்பிடுவர், அந்த வகையில் மீந்து போன சாதத்தில் மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்யலாம். ரைஸ் வெஜ் பால்ஸ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வடித்த சாதம் - 2 கப்
கோஸ், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
கார்ன் ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வடித்த சாதத்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்து எடுக்கவும். முட்டைகோஸ், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த சாதம் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது சேர்த்து பிசையவும். அடுத்து எலுமிச்சைச் சாறு, உப்பு, கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மாவு தளர்வாகி விட்டால் கொஞ்சம் கடலை மாவு சேர்த்து பிசையவும். இப்போது கலவையை உருண்டை பிடித்துக் கொள்ளவும். அடுத்ததாக, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் உருண்டையை சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். அவ்வளவு தான் சூடான ரைஸ் வெஜ் பால்ஸ் ரெடி. தக்காளி சாஸுடன் வைத்து சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/