சக்கரவள்ளிக் கிழங்கு வடை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சக்கரவள்ளி கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
நிலக்கடலை - 1 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாய்யில் நிலக்கடலையை போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சக்கரவள்ளிக் கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி விட்டு துருவிக்கொள்ளவும். துருவிய சக்கரவள்ளிக்கிழங்குடன் பொடித்த நிலக்கடலையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும். அடுத்தாக இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவு சற்று கெட்டியாக இருந்தது என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை வடை போன்று தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு பிசைந்து வைத்துள்ள மாவு அனைத்தையும் வடை செய்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான, ஆரோக்கியமான சக்கரவள்ளி கிழங்கு வடை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“