பிரியாணி என்றாலே பிடிக்கும். அதுவும் அசைவம் என்றால் சொல்லவே வேண்டாம். பலரும் விரும்பி சாப்பிடுவர். பிரியாணியை தேடி தேடி சென்று சாப்பிடுபவர்களும் உள்ளனர். அந்தளவிற்கு பிரியாணி பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். பிரியாணியின் சுவை அப்படி இருக்கும். அந்த பிரியாணியை நம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதுவும் சீரகச் சம்பா அரிசியில் செய்தால் இன்னும் டேஸ்டாக இருக்கும். சீரகச் சம்பா சிக்கன் பிரியாணி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - அரை கிலோ
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தயிர் - கால் கப்
அரைத்த தக்காளி விழுது - அரை கப்
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
தண்ணீர் - 4 கப்
பட்டை- 2
லவங்கம் - 4
அரைக்க தேவையானவை
வெங்காயம் - 2 நறுக்கியது
புதினா, கொத்துமல்லி இலை - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4-6
பூண்டு பல் - 25
இஞ்சி - 2 துண்டு
மிளகு -1 தேக்கரண்டி
பட்டை- 2
லவங்கம்- 4
ஏலங்காய்- 3
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த சிக்கனில் தயிர், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர், அடுப்பில் குக்கர் வைத்து சிறிது எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி கரம் மசாலாவைச் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். இப்போது சிக்கன் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்கு வதக்க வேண்டும். ஸ்லோ பிளேமில் வைத்து தீயில் நன்கு வதக்க வேண்டும்.
அடுத்ததாக, அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இந்த மசாலாவை சிக்கனுடன் சேர்க்கவும். இதற்கிடையில் அரிசியை அரைமணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் சிறிதளவு எண்ணெய் கலந்து வைத்துவிட வேண்டும். இப்போது, ஊற வைத்த அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிக்கன் உள்ள குக்கரில் போட்டு 1 விசில் விட்டு இறக்கிவிட வேண்டும். அவ்வளவு தான், சூடான, சுவையான, நாக்கில் எச்சில் ஊறும் சீரகச் சம்பா சிக்கன் பிரியாணி ரெடி. காணும் பொங்கல் ரெசிபியாக இதை ட்ரை செய்து பாருங்க.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/