கோடைக்காலம் வந்துவிட்டாலே, உடல் சூட்டைத் தணிக்கும் அதே வேளையில் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் உணவுகளைத் தேடுவது வழக்கம். அந்த வகையில், தயிர் சாதம் மிகச்சிறந்த தேர்வாக இருக்கிறது. குருகிராமில் உள்ள நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் மோஹினி டோங்ரே indianexpress.com க்கு அளித்த பேட்டியில், தயிர் சாதம் உடலுக்குக் குளிர்ச்சி அளிப்பதோடு, வெப்பமான காலநிலையில் மிகவும் இதமான உணவாகவும் திகழ்கிறது என்று கூறியுள்ளார்.
தயிர் சாதம் உங்கள் ஆரோக்கியத்திற்கு எப்படி நன்மை அளிக்கிறது?
புளிப்பான தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்திற்கு உதவுவதோடு உடல் வெப்பத்தையும் குறைக்கின்றன. மேலும், இந்த கலவையில் வைட்டமின் பி12, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. தயி புளித்த பிறகு, ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நூறு மடங்கு அதிகமாகின்றன என்று அவர் குறிப்பிட்டார். "இது குடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும், உடல் எடையை நிர்வகிக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது," என்று மோஹினி கூறினார்.
குடலுக்கு நன்மை அளிப்பது மட்டுமல்லாமல், புளிக்க வைக்கப்பட்ட தயிரில் லாக்டோபாகிலஸ் போன்ற நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளன. இது ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. "இதில் அரிசியிலிருந்து கார்போஹைட்ரேட்டுகள், தயிரிலிருந்து புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதனால் இது ஒரு சமச்சீர் உணவாக அமைகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுவாக, மதிய உணவுவில் சாதம் மற்றும் பருப்புடன் வறுத்த உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது. இந்நிலையில், கொகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் பிரதீக்ஷா indianexpress.com க்கு அளித்த பேட்டியில், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து கண்ணோட்டத்தில், தயிர் சாதத்துடன் உருளைக்கிழங்கு பொரியலைச் சேர்ப்பது நல்லதல்ல என்று கூறினார்.
வறுத்த உருளைக்கிழங்கை தயிர் சாதத்துடன் ஏன் தவிர்க்க வேண்டும்?
"புரோபயாடிக்குகள் நிறைந்த மற்றும் வயிற்றுக்கு மிகவும் ஊட்டமளிக்கும் தயிர் சாதம் எளிதில் ஜீரணமாகும் மற்றும் குடலுக்கு நல்லது. மறுபுறம், தயிர் சாதத்தின் இந்த நன்மைகளை, அதிக எண்ணெய், அதிக உப்பு மற்றும் அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உருளைக்கிழங்கு பொரியல் எதிர்மறையாக மாற்றிவிடும். இது செரிமானத்திற்கு உதவுவதற்கும் பதிலாக வேறு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று அவர் கூறினார்.
அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை தயிர் சாதம் போன்ற லேசான உணவுடன் சேர்த்துக்கொள்வது வயிறு உப்புசம், அஜீரணம் அல்லது பொதுவான அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் தயிர் சாதத்தின் சுவையை அதிகரிக்க நார்ச்சத்து நிறைந்த கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற வதக்கிய காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம் என்று அவர் பரிந்துரைத்தார். "சுவை மற்றும் செரிமானத்திற்கு, நெய் அல்லது நல்லெண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம். மொறுமொறுப்பான மற்றும் புரதம் நிறைந்த உணவுக்கு வறுத்த வேர்க்கடலை அல்லது மாதுளை முத்துக்களைச் சேர்க்கலாம். மேலும், புளிப்பான துருவிய பச்சை மாங்காய் ஒரு அருமையான மாற்றாக இருக்கும்," என்று அவர் கூறினார்.
இந்த மாற்றங்கள் தயிர் சாதத்தை மேலும் சுவையாகவும், சாப்பிட ஏற்றதாகவும் மாற்றுவதோடு அதன் ஊட்டச்சத்து மற்றும் வயிற்றுக்கு உகந்த பண்புகளையும் தக்கவைக்கின்றன.