சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிட வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அனைத்து மனிதர்களுக்கும் காலை உணவு மிக முக்கியம் என்ற நிலையில், சர்க்கரை நோயாளிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
Advertisment
நம்மில் பெரும்பாலானோர் வழக்கமாக இட்லி, தோசை, பொங்கல், பூரி ஆகியவற்றையே காலை உணவாக எடுத்துக் கொள்வர். ஆனால் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதை விட சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவை சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
ஹெல்தி தமிழ்நாடு என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மருத்துவர் சிவராமன் தெரிவித்து இருப்பதாவது;
இட்லி சிறந்த உணவு தான். குறிப்பாக குழந்தைகளுக்கு சிறப்பான உணவு. 45 வயதுக்கு மேற்பட்டோர் தினமும் இட்லி சாப்பிடுவது சிறந்ததல்ல. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடுவதை குறைக்க வேண்டும். காலையில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சென்னையில் நடந்த ஒரு ஆய்வின்படி சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்ற குறைந்த கிளைசீமிக் இண்டெக்ஸ் உணவுகளாக வெள்ளைச் சுண்டலும், கோதுமை ரவா உப்புமாவும் இருக்கின்றன.
Advertisment
Advertisements
வெள்ளைச் சுண்டல் புரதச் சத்து நிறைந்தது மட்டுமில்லாமல், ரத்தத்தில் சர்க்கரை வேகமாக சேர்வதையும் தடுக்கிறது. கோதுமை ரவா உப்புமாவில் கிளைசீமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளது. கிளைசீமிக் இண்டெக்ஸ் என்பது ரத்தத்தில் சர்க்கரையை சேர்க்கும் அளவாகும்.
அடுத்ததாக, காய்கறித் துண்டுகள், பழங்கள் நிறைந்த ஸ்மூத்தி அல்லது பழச்சாறு சாப்பிடலாம். புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. தினமும் முட்டை சாப்பிடலாம். முட்டை விரும்பாதவர்கள் நிலக்கடலை, பாதாம் பருப்பு போன்றவற்றை சாப்பிடலாம்.
வாரத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் இட்லி எடுத்துக் கொள்ளலாம். அதுவும் வெள்ளை இட்லியாக இல்லாமல், பழுப்பு, சாம்பல், சிவப்பு நிறத்தில் இருப்பது சிறந்தது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.