வெள்ளரிக்காய் சாப்பிட்டால் ஆண்களுக்கு ஏற்படக் கூடிய புற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படலாம் என சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
வெள்ளரிக்காய் நாம் அதிகம் சாப்பிடாத காய்களில் ஒன்று. கோடைக்காலங்களில் சிலர் வாங்கி சாப்பிடுவர். பெரும்பாலான இளைஞர்கள் சால்ட்டில் வெள்ளரிக்காய் இருந்தால் சாப்பிடுவதோடு சரி. ஆனால் இந்த வெள்ளரிக்காய் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியத்திற்கு உதவக் கூடியது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற வெள்ளரிக்காய், எடை இழப்புக்கும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மேலும் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவுவதால், வெள்ளரிக்காய் சிறுநீரகத் தொற்று பாதிப்புகளில் இருந்தும் நம்மைக் காக்கிறது.
இத்தகைய வெள்ளரிக்காய் புற்றுநோய்யையும் தடுக்க உதவும் என்று சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் வெள்ளரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் நாம் அதை தொடுவதில்லை. வெள்ளரியின் விதை ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் வருவதைத் தடுக்க உதவுகிறது. ஆனால் நாம் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் சற்று குளிர்ச்சி தரும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறோம்.
வெள்ளரிக்காய் சாப்பிட்டால் சிறுநீரகத் தொற்று நோய் வராது. ஆண்களுக்கு 55 வயதுக்கு மேல் புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் வருவது இயல்பு. இந்த வீக்கம் புற்றுநோயாக மாறாமல் இருப்பதற்கு இரண்டு மருந்துகள் தான் பெரிய அளவில் ஆராயப்பட்டிருக்கிறது. ஒன்று வெள்ளரிக்காய் மற்றொன்று வெள்ளைப்பூசணி. இவ்வாறு சித்த மருத்துவர் சிவராமன் யூடியூப் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“