இட்லி, தோசை உள்ளிட்ட டிஃபன் வகைகளுக்கு ஒவ்வொரு நாளும் விதவிதமான சட்னி செய்தாலும், வேறு ஏதேனும் புதிய வகை சட்னி இருக்கிறதா என்று பலரும் கேட்பார்கள். அவர்களுக்கு ஏற்ற வகையில், ஹைதராபாத் ஸ்டைலில் தண்ணி சட்னி எப்படி சிம்பிளாக செய்யலாம் என்று இதில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய்,
பூண்டு,
பச்சை மிளகாய்,
புளி,
பெரிய வெங்காயம்,
கறிவேப்பிலை,
உப்பு,
வேர்க்கடலை,
பொட்டுக் கடலை மற்றும்
கடுகு
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றவும். இதில் 7 பல் பூண்டு, 10 பச்சை மிளகாய், நெல்லிக்காய் அளவில் புளி, சிறிதாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், கொஞ்சமாக கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
இதன் பின்னர், 50 கிராம் வறுத்த வேர்க்கடலை, 50 கிராம் பொட்டுக் கடலை சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். இதையடுத்து, இவற்றை ஆறவைத்து, அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் பசை பதத்திற்கு அரைக்க வேண்டும்.
இனி, தாளிப்பதற்காக அடுப்பில் இருக்கும் கடாயில் எண்ணெய் ஊற்றவும். இதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். இதையடுத்து, மிக்ஸியில் அரைத்த கலவை மற்றும் ஒரு பெரிய கிளாஸ் தண்ணீரை இத்துடன் சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான தண்ணி சட்னி தயாராகி விடும்.