தீபாவளியை முன்னிட்டு பல விதமான பலகாரங்களை கடையில் வாங்கினாலும் வடை மற்றும் பஜ்ஜி ஆகியவற்றை வீட்டிலேயே தயார் செய்வோம். அவ்வாறு எண்ணெய் பிடிக்காத புசு புசு உளுந்து வடை மற்றும் மொறு மொறு வாழைக் காய் பஜ்ஜி செய்வதற்கான டிப்ஸை தற்போது பார்க்கலாம்.
வடை செய்ய தேவையான பொருள்கள்:
300 கிராம் உருட்டு உளுந்து,
3 டேபிள் ஸ்பூன் பச்சரிசி,
ஒரு வெங்காயம்,
2 பச்சை மிளகாய்,
கொத்தமல்லி.
செய்முறை:
300 கிராம் உருட்டு உளுந்து மற்றும் மூன்று டேபிள் ஸ்பூன் பச்சரிசியை தனித்தனியாக ஊற வைக்க வேண்டும். சுமார் 1 மணி நேரம் ஊறியதும் அவற்றை நன்றாக கழுவி வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர், பச்சரிசியை தனியாக போட்டு இரண்டு நிமிடங்கள் அரைக்க வேண்டும். அதன்பின்னர் உளுந்தை போட்டு நன்றாக மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு கெட்டியானதும் தண்ணீரில் மிதக்கும் பதத்திற்கு வந்த பின்னர், தனியாக வெட்டி வைத்த வெங்காயம், 2 பச்சை மிளகாய், கொத்த்தமல்லி ஆகிய வற்றை மாவுடன் சேர்த்து கலக்க வேண்டும். அதன்பின்னர், மிதமான சூட்டில் கொதிக்கும் எண்ணெயில் மாவு கலவையை போட்டு எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான வடை தயாராகி விடும்.
வாழைக்காய் பஜ்ஜி செய்ய தேவையான பொருள்கள்:
3 வாழைக்காய்கள்,
300 கிராம் நயம் கடலை மாவு
75 கிராம் நயம் அரிசி மாவு
2 டேபிள் ஸ்பூன் தனி மிளகாய் பொடி
1 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் சில்லி பவுடர்
அரை டேபிள் ஸ்பூன் பெருங்காயம்
ஒரு டேபிள் ஸ்பூன் தூள் உப்பு
செய்முறை:
வாழைக்காய்களில் மேல் புறம் மற்றும் கீழ் புறத்தை சீவி எடுக்க வேண்டும். அதன் பின்னர் வாழைக்காயின் தட்டையான பகுதியில் இருந்து பஜ்ஜி அளவிற்கு வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனிடையே, பஜ்ஜிக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கி விட்டு, அவற்றுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். குறிப்பாக தண்ணீரை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து 10 நிமிடங்கள் விடாமல் கலக்க வேண்டும். இறுதியாக மிகச் சிறிய அளவில் சோடா உப்பு சேர்த்த பின்னர், பஜ்ஜி மாவில் வாழைக்காயை நன்றாக தடவி, எண்ணெயில் போட்டு எடுத்தால் மொறு மொறு வாழைக் காய் பஜ்ஜி தயாராகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“