பொன்னாங்கன்னி கீரையில் சிவந்த நிறத்தில் இருக்கும் கூடுதலாக நிறைய பயன்கள் இருக்கிறது, நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரை செய்கிறார்.
பாரம்பரிய உணவுகள் குறித்தும் சித்தமருத்துவம் குறித்தும் இயற்கை உணவுகள் குறித்தும் ஊர் ஊராக சென்று பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மருத்துவர் சிவராமன். ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் சேனலில் பேசியுள்ள மருத்துவர் சிவராமன், பொன்னாங்கன்னி கீரையில் உள்ள மருத்துவப் பயன்களையும் அதே போல, சிவப்பு நிற பொன்னாங்கண்ணி கீரையில் உள்ள கூடுதல் நன்மைகளையும் கூறியுள்ளார்.
இதில், சிவப்பு நிற பொன்னாங்கண்ணி கீரையில் என்ன கூடுதல் நன்மைகள் உள்ளது என்பதை இங்கே பார்ப்போம்.
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை, நன்றாக சிவப்பு நிறத்திலிருக்கும். பார்ப்பதற்கு குரோட்டன் போல இருக்கும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, மாரடைப்பு போன்ற நாள்பட்ட பல நோய்களுக்கு மருத்துவர்கள் மருந்து எழுதும்போது, கூடவே ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மருந்து ஒன்றை எழுதுவார்கள். அதற்கு ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் தேவை உள்ளது. அத்தகைய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்டை இந்த சிவப்பு பொன்னாங்கண்ணி நேரடியாகத் தருகிறது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
இந்த பொன்னாங்கண்ணி கீரையை நாம் வீட்டிலேயே வளர்த்துக்கொள்ளலாம். பொன்னாங்கண்ணி கீரையை பொரியல் செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால், கண் பார்வை துலங்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு கண் பார்வை துலங்கும்.
இரும்புச் சத்து முதல் நிறைய கனிமங்களைக் கொடுத்து உடலை தங்கம் போல பளபளக்க வைக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதனால், சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை எங்கேயாவது கிடைத்தால் விட்டுவிடாதீர்கள்.