தமிழ்நாட்டின் தினசரி உணவுகளில் ஒன்றாக இட்லி இடம்பிடித்துள்ளது. அப்படி இருந்தாலும்கூட, பலரும் தாங்கள் செய்யும் இட்லி கல்லு மாதிரி இருப்பதாகக் கூறுகிறார்கள். நீங்கள் செய்யும் இட்லி மல்லிப்பூ மாதிரி சாஃப்ட்டா இருக்க வேண்டுமா, அதற்கு கொஞ்சம் ஐஸ்வாட்டர் சேர்த்து இப்படி மாவு அரைத்து பாருங்கள் புசுபுசுவென குஷ்பு இட்லி செய்யலாம். அதற்கு பிறகு, நீங்கள் கல்லு மாதிரி இட்லிக்கு டாட்டா பைபை சொல்லுங்க.
மல்லிப்பூ மாதிரி சாஃப்ட் இட்லி செய்முறை
அரிசியை அளந்து போடுவதற்கு ஒரே கப் அல்லது ஒரே கிளாஸைப் பயன்படுத்துங்கள். முதலில் 4 கப் புழுங்கல் அரிசி எடுத்துக்கொள்ளுங்கள். 1 கப் பச்சரிசி எடுத்து சேர்த்துக்கொளுங்கள்.
அடுத்த தனியாக வேறு ஒரு பாத்திரத்தில் அதே 1 கப் அளவு புதிய உளுந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து தனியாக வேறு ஒரு பாத்திரத்தில் 1/4 கப் அளவு ஜவ்வரிசி எடுத்துக்கொள்ளுங்கள்.
அரிசி உளுந்து எல்லாவற்றையும் ஒரு 3-4 முறை கழுவி எடுத்துக்கொள்ளுங்கள்.
இதில் உளுந்து உடன் 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது, அரிசி, உளுந்து, ஜவ்வரி எல்லாவற்றையும் தனித் தனியாக 6 மணி நேரம் ஊறவையுங்கள். உளுந்து மட்டும் எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து வையுங்கள். அதே நேரத்தில், ஐஸ் க்யூப்களைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். 6 மணி நேரத்துக்கு பிறகு, மாவு அரையுங்கள். இட்லிக்கு முடிந்த வரை கிரைண்டரில் மாவு அரையுங்கள். முதலில் உளுந்து மாவு அரைக்கும்போது, உளுந்து ஊற வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி அரையுங்கள். அதனுடன் ஐஸ் க்யூப்களைப் போட்டு அரையுங்கள். மாவு பொங்கி வரும்போது கிரைண்டரில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, ஜவ்வரிசியை கிரைண்டரில் தனியாக போட்டு அரையுங்கள், 5 அரைத்த பிறகு, அதனுடன் ஊறவைத்த அரிசியைப் போட்டு அரையுங்கள். மாவை நன்றாக மைய அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது இதனுடன் நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள உளுந்தைப் போட்டு அரையுங்கள். அதனுடன் தேவையான அளவு சிறிது உப்பு போட்டு அரையுங்கள். அரிசி மாவையும் உளுந்து மாவையும் 5 நிமிடம் அரைத்த பிறகு, மாவை கிரைண்டரில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள். அந்த மாவை கைகளால் நன்றாகக் கரைத்துக்கொள்ளுங்கள். மாவு அதிக அளவில் இருந்தால், நீங்கள் அதை 2 நாள் பயன்படுத்த விரும்பினால், மாவைப் பிரித்து தனித்தனியாக 2 பாத்திரங்களில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். இப்போது மாவை 8 மணி நேரம் புளிக்க வையுங்கள்.
மாவு புளித்த பிறகு, மாவை சிறிது கலந்துவிடுங்கள். அவ்வளவுதான், நீங்கள் வழக்கம் போல, உங்கள் இட்லி தட்டில் மாவு ஊற்றி இட்லி அவித்துக்கொள்ளலாம். இட்லி வெந்த பிறகு திறந்து பாருங்கள், புசுபுசுவென சாஃப்ட்டான மல்லிப்பூ இட்லி வந்திருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.