/indian-express-tamil/media/media_files/2025/08/19/egg-chapati-small-1755356229-2025-08-19-14-24-25.webp)
உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்கள் என்றால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக செய்து பாருங்கள். வழக்கமான சப்பாத்தியை விட முற்றிலும் மாறுபட்ட, சைடு டிஷ் தேவையில்லாத ஒரு அருமையான முட்டை சப்பாத்தி ரெசிபியைப் பற்றி இங்கே காண்போம். இது காலை உணவாகவோ, இரவு உணவாகவோ அல்லது பள்ளிக்கு லன்ச் பாக்ஸிலோ செய்து கொடுக்க ஏற்றது. ஒருமுறை இதைச் செய்து கொடுத்தால், நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்யச் சொல்வார்கள்.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
தண்ணீர் - 1 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கோதுமை மாவு - 1 கப்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - சிறிது
முட்டை - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும், அதில் தக்காளியை மேலே கீறிவிட்டுச் சேர்த்து, சுமார் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். பின் அடுப்பை அணைத்து, தக்காளியை ஆற விடவும்.
தக்காளி குளிர்ந்ததும், அதன் தோலை உரித்து, மிக்ஸர் ஜாரில் போடவும். அதனுடன் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து, ஒரு பெரிய பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவை எடுத்து, அதில் அரைத்து வைத்த தக்காளி கலவை மற்றும் 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து நன்கு பிசையவும். சப்பாத்தி மாவு மென்மையாக இருக்கும் வரை பிசைந்து, அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி, மூடி வைத்து 5 நிமிடங்கள் ஊற விடவும்.
பிறகு, ஒரு தட்டில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் மஞ்சள் தூள், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு அடித்து கலக்கி வைக்கவும். இப்போது, பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறிய உருண்டை எடுத்து, அதை கோதுமை மாவில் பிரட்டி, வழக்கமான சப்பாத்தி போல மெல்லியதாக தேய்க்கவும்.
தேய்த்த சப்பாத்தியை சூடான தோசைக்கல்லில் போட்டு, ஒருபுறம் சற்று வெந்ததும் திருப்பிப் போடவும். பின் அதன் மேல் சிறிதளவு முட்டை கலவையை ஊற்றி, சப்பாத்தி முழுவதும் பரப்பவும். சப்பாத்தியின் ஓரங்களில் எண்ணெய் விட்டு, முட்டை வெந்ததும், மறுபக்கம் திருப்பிப் போட்டு வேக வைக்கவும்.
இரண்டு பக்கமும் நன்கு வெந்து, பொன்னிறமானதும், அதை எடுத்து சூடாகப் பரிமாறவும். இந்த முட்டை சப்பாத்தி செய்வதற்கு எளிமையானது மட்டுமல்ல, மிகவும் சுவையானதும் கூட. இதைச் செய்யும்போது, நீங்கள் சைடு டிஷ் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.