மதியம் சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான காம்பினேஷனாக இருக்கும் மணக்க மணக்க எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம். மைசெல்ஃப் டைம் இன்ஸ்டா பக்கத்தில் கூறப்பட்டுள்ள இந்த ரெசிபியைப் பற்றி இங்கே விரிவாகக் காணலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 6
பச்சை மிளகாய் - 1
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 1.5 ஸ்பூன்
தேங்காய் - ஒரு கைப்பிடி அளவு
புளி - சிறிது
சின்ன வெங்காயம் - 5
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கத்திரிக்காய் - தேவையான அளவு
கல்லுப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய பின்னர், சோம்பு, சீரகம், தனியா, மிளகு, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
பிறகு தேங்காயைச் சேர்த்து வதக்கிய பின், புளியை சேர்த்து மிக்ஸியில் அரைத்து மசாலா விழுதாகத் தயார் செய்து கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக கீறி, கடாயில் சேர்த்து நன்கு வதக்கவும். கத்திரிக்காய் கண்ணாடிப் பதம் வந்ததும், அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். பின்னர், ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் கல்லுப்பு சேர்த்து, 10 நிமிடம் மிதமான சூட்டில் குழம்பை வேகவிடவும். அவ்வளவுதான், சுவையான, மணக்க மணக்க எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்போது தயார்.