இட்லி, தோசை நம் வீடுகளில் தினமும் செய்யக் கூடிய உணவு. ஆரோக்கியமான உணவு. இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னி, சாம்பார் வைத்து தான் சாப்பிடுவோம். ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைப்போம் ஆனால் செய்திருக்க மாட்டோம். இங்கு இட்லி, தோசைக்கு ஏற்ற புதுமையான ரெசிபி குறித்து பார்க்கலாம். காலையில் அவசரமாக உணவு செய்கிறீர்கள் என்றாலும், இந்த தொக்கு ஈஸியாக செய்து சாப்பிடலாம். சுவையான வெங்காயத் தொக்கு செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 4
தனியா - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
கறிவேப்பிலை - தேவையாள அளவு
புளி - சிறிதளவு
செய்முறை
வெங்காயத் தொக்கு செய்வதற்கு முதலில் 4 பெரிய வெங்காயத்தை எடுத்து நீள வாக்கில் நறுக்கி வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்,
இப்போது அடுப்பில் பேன் வைத்து சூடானதும், தனியா, வெந்தயம், கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து நன்றாக சிவந்து வரும் வரை வறுத்து எடுத்து ஆற வைக்கவும். வறுத்த மசாலா நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
இப்போது மீண்டும் அடுப்பில் ஒரு கடாய் வைத்து, 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தொக்கிற்கு எண்ணெய் அதிகமாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். நல்லெண்ணெய் தொக்கிற்கு கூடுதல் சுவை தரும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போடவும். அடுத்து, அரைத்து வைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காய விழுது வதங்கியுதும், மசால் அரைத்து வைத்ததை சேர்க்கவும். இப்போது புளி எடுத்து கரைத்து அந்த புளித்தண்ணீரை இதில் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியாக 1 டீஸ்பூன் தூள் வெல்லம் சேர்க்கலாம். எல்லாம் சேர்த்து 5 நிமிடம் தொக்கை வதக்கி அடுப்பை அணைக்கலம், அவ்வளவு தான் சுவையான வெங்காயத் தொக்கு தயார்.