தென்னிந்திய சமையலில் கருவாட்டுக் குழம்புக்கு எப்போதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதிலும் தேங்காய் சேர்க்காமல், மசாலாக்களை அரைத்துச் செய்யப்படும் இந்தக் "அரச்சு விட்ட கருவாட்டு குழம்பு," அதன் பாரம்பரிய சுவைக்காகவே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கருவாட்டு குழம்பு மெரினா பீச்சில் உள்ள சுந்தரி அக்கா கடையில் கிடைக்கும் இதை வீட்டிலேயே எளிதாக எப்படிச் செய்வது என்று சாய்மணிவிவேக் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
வெந்தயம்
சீரகம்
பூண்டு பற்கள்
சின்ன வெங்காயம்
தக்காளி
குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு
காய்கறிகள் (கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு - விருப்பத்திற்கேற்ப)
உப்பு
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
புளிக்கரைசல்
சுத்தம் செய்த கருவாடு (சுடுநீரில் ஊற வைத்தது)
மாங்காய் (துண்டுகளாக்கியது)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். வெந்தயம் மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும். அடுத்து, பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கிய இந்த பொருட்களை மிக்ஸி ஜாருக்கு மாற்றவும். அதனுடன் 1 டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், 1 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மையாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை தனியாக வைக்கவும்.
அதே பாத்திரத்தில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு சேர்த்து பொரிந்ததும், அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்க்கவும். இப்போது, உங்களுக்கு விருப்பமான கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளைச் சேர்க்கலாம்.
தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி, காய்கறிகள் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்ததும், புளிக்கரைசலை சேர்க்கவும்.
சுடுநீரில் ஊற வைத்து சுத்தம் செய்த கருவாடை சேர்க்கவும். குழம்பை சுமார் 10 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். கடைசியாக, மாங்காய் துண்டுகளைச் சேர்த்து, தேவைப்பட்டால் உப்பு சரிபார்க்கவும். மேலும் 2 நிமிடங்கள் சமைத்து, அடுப்பை அணைக்கவும்.
சுவையான அரச்சு விட்ட கருவாட்டு குழம்பு இப்போது தயாராகிவிட்டது. இதை சூடான சாதத்துடன் பரிமாறலாம்.