இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி ஒரு வார இடைவெளியில் வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி ஆக.26-ம் தேதியும், விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7-ம் தேதியும் வருகிறது. பண்டிகை நாட்களில் வீட்டில் இனிப்பு கொழுக்கட்டை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
அரிசி மாவு- 1 கப்
வெல்லம்- 150 கிராம்
வேர்க்கடலை- 100 கிராம்
துருவிய தேங்காய்- 1 மூடி
ஏலக்காய் பொடி- ½ ஸ்பூன்
நெய்- தேவையான அளவு
உப்பு- சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் வேர்க் கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றும் பாதியாக அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும் துருவிய தேங்காய், அரைத்த வேர்க்கடலை மற்றும் வெல்ல பாகு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
இவை கொஞ்சம் கெட்டியாக மாறியவுடன் அதில் மீதமுள்ள நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணத்தை இறக்கி வைக்கவும். தற்போது அரிசி மாவில் சுடுதண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் தேவையான அளவு மாவை எடுத்து வட்டமாக தேய்த்து அதனுள் பூரணத்தை வைத்து ஓரங்களை மடித்துவிடவும். அடுத்து பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டையை இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்தால் சுவையான இனிப்பு கொழுக்கட்டை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“