பண்டிகை நாட்களில் ஒவ்வொரு வீடுகளிலும் இனிப்பு பலகாரங்கள் செய்வது பண்டை காலம் முதலே நடந்து வரும் ஒரு பொதுவான நிகழ்வு. காலங்கள் பல கடந்து வந்தாலும் பலகாரங்களின் வகைகள் தான் மாறியுள்ளதே தவிர அதை செய்யும் மனப்பக்குவம் இன்றும் நம்மில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது விரைவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக நீங்கள் இப்போது இருந்தே உங்களையும உங்கள் வீட்டையும் தயார்ப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இருக்கலாம். இந்த முயற்சியில் தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்வது என்ற குழப்பம் உங்களிடம் இருக்கிறதா? அப்படி என்றால் உங்களுக்கு ஒரு நல்ல யோசனை இருக்கிறது. இதுதான் குலாப் ஜாமூன்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த இனிப்பு பலகாரத்தை செய்வது சரி ஆனால் அதை உடையாமல் பதமாக எடுக்க வேண்டுமே என்று நீங்கள் யோசிக்கலாம். அவ்வாறு குலாப் ஜாமூனை உடையாமல் நல்லா குண்டு குண்டாக செய்து எடுப்பது எப்படி அதற்கு என்ன சேர்க்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
குலாப் ஜாமூன் மாவு – அரைகிலோ
சர்க்கரை – அரைகிலோ
தண்ணீர் – 700 எம்.எல்
ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
பால் – தேவையான அளவு
எண்ணெய் – அரை லிட்டர்
செய்முறை :
முதலில் குலாப் ஜாமூன் மாவை நன்றாக சளித்து அதில் 2 ஸ்பூன் தயிரை சேர்ந்து நன்றாக பிசைந்து அதில் சிறிது சிறிதாக பாலை சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.
மாவு ரொம்பவும் கெட்டியாகவோ அல்லது தண்ணியாகவோ இல்லாமல் சப்பாத்தி மாவு போன்று பிசைந்து அதில் நெய், சிறிதளவு எண்ணெய் சேர்ந்து பிசைந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
அதன்பிறகு ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தில் 700 எம்.எல் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் நனறாக கொதித்தவுடன் அதில் சர்க்கரையை சேர்ந்து நன்றாக கலக்கவும்.
சர்க்கரை தண்ணீருடன் சேர்ந்து நன்றாக கலந்து பிசுபிசுப்பு தன்மை வந்தவுடன் அதில் ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு, சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிவிடவும்.
அடுத்து பிசைந்து வைத்துள்ள குலாப் ஜாமூன் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். உருண்டையை உருட்டுவதற்கு முன்பாக கையில் எண்ணெய் அல்லது நெய் தடவிக்கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் குலாப் ஜாமூன் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டைகளை அதில் போடவும்.
ஓரளவு நன்றாக வேகும்வரை கரண்டியால் உருண்டைகளை திருப்பிவிட வேண்டும். உருண்டை நன்றாக சிவந்து பிரவுன் கலரில் வந்தவுடன் எடுத்து ஆறவைக்கவும். ஆறியதும் ஜீராவில் போட்டு 2 மணி நேரம் ஊறிய பிறகு எடுத்து பறிமாறுங்கள். சுவையாக குலாப் ஜாமூன் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“