/indian-express-tamil/media/media_files/XzANuNTCB7en80OfyI2z.jpg)
ரேஷன் கடையில் வாங்கும் அரிசியில் கூட பஞ்சு போன்ற, மிருதுவான இட்லியை எப்படிச் செய்வது என்பது பற்றிப் பார்ப்போம். இந்த குறிப்புகளில் சில ரகசியங்கள் ஒளிந்துள்ளன, அவற்றைப் பின்பற்றினால் யாரும் ரேஷன் அரிசியில் செய்த இட்லி என்று கண்டுபிடிக்க முடியாது.
8 டம்ளர் ரேஷன் புழுங்கல் அரிசி மற்றும் 4 டம்ளர் பச்சரிசி சேர்த்து மொத்தம் பன்னிரண்டு டம்ளர் அரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். அரிசியை ஒரு நான்கு மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊறவையுங்கள். இதனால் அரைப்பது எளிதாக இருக்கும். ஒரு டம்ளர் முழு உளுந்தை எடுத்துக்கொள்ளுங்கள். அரிசி ஊறப்போடும்போது, உளுந்தையும் முதல் முறையாகத் தண்ணீர் ஊற்றி அலசிவிட்டு, அந்தத் தண்ணீரைக் கொட்டிவிடுங்கள்.
பிறகு சுத்தமான தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் மட்டும் ஊறவையுங்கள். உளுந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊறினால், மாவு அதிக புளிப்புடன் நீர்த்துப் போய்விடும். அதிக அளவு உளுந்து ஊறவைத்தால், இரண்டு மணி நேரம் வரை ஊறவிடலாம். மாவு அரைக்கும்போது கிரைண்டர் சூடாகாமல் இருக்க, மாவுடன் குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் க்யூப்களைச் சேருங்கள். இது மாவு சூடாகி, இட்லி கல் போன்று வருவதைத் தடுக்கும்.
கிரைண்டரில் மாவு அரைக்கப் போகும்போது, முதலில் சிறிது தண்ணீர் ஊற்றிய பின்னரே அரிசியைச் சேர்க்கவும். இது கிரைண்டர் கல்லை மேலே தூக்காமல் இருக்க உதவும். மொத்த அரிசியையும் ஒரே நேரத்தில் அரைக்காமல், மூன்று பகுதிகளாகப் பிரித்து அரைக்கவும். இது கிரைண்டர் சுவரில் மாவு ஒட்டிக்கொள்வதையும் சுத்தம் செய்வதற்கான நேரத்தையும் குறைக்கும். உளுந்து மாவு அரைப்பதில் தான் இட்லியின் சுவை அடங்கியிருக்கிறது.
முதலில் கிரைண்டரில் ஒரு டம்ளர் உளுந்தைப் போட்டு ஐந்து நிமிடம் அரைக்கவும். பிறகு, பாதியாகப் பிரித்து, மீதமுள்ள உளுந்தைப் போட்டு, மீண்டும் பத்து நிமிடம் வரை அரைக்கவும். மொத்தம் அரை மணி நேரம் உளுந்து அரைத்தால், அது நன்கு பஞ்சுபோல் மிருதுவாகி விடும். மாவு கையில் ஒட்டாமல், தண்ணீரில் போட்டால் மிதந்து வரும் அளவுக்கு மிருதுவாக இருக்க வேண்டும். அரைத்து எடுத்த உளுந்து மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாகக் கலக்க வேண்டும்.
கையால் குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு நன்கு கலந்து விடுங்கள். இதனால் மாவு நன்கு கலந்திருக்கும். மாவு புளிக்காமல் இருக்க, உப்பு சேர்க்காமல் ஒரு டப்பாவில் எடுத்து வைத்து, தேவையான மாவில் மட்டும் உப்பு கலந்து பயன்படுத்தலாம். மாவு புளிப்பதற்கு ஏற்ற வெப்பநிலை முக்கியம். பொதுவாக எட்டு மணி நேரத்தில் மாவு புளித்துவிடும். மாவு புளிக்கவே இல்லை என்றால், மாவில் உப்பு கலந்து, ஒரு சின்ன கரண்டி அல்லது ஸ்பூனை மாவில் போட்டு வைத்தால், அது வேகமாகப் புளிக்கும்.
மாவு மிகவும் புளித்து விட்டால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதன் மேல் இட்லி மாவு பாத்திரத்தை வைத்து வைத்தால் மாவு அதிகமாகப் புளிக்காது. இட்லிக்கு மாவு புளித்ததும், அதை நன்கு கலக்கிவிட்டு, இட்லி தட்டில் ஊற்றவும். துணியை லேசாக ஈரப்படுத்தி, மாவை ஒரு கரண்டி அளவுக்கு மட்டும் ஊற்றுங்கள். தண்ணீர் நன்கு கொதித்ததும், இட்லி தட்டை வைத்து பத்து நிமிடங்களில் ஆவியில் வேக வையுங்கள். இட்லி வெந்ததும், ஒரு சில துளிகள் தண்ணீர் தெளித்து, இட்லியை எளிதாக எடுக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.