தக்காளி சாதம் என்றாலே பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும், தேங்காய்ப்பால் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெரிய வெங்காயம் - 1 (நான்காக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நான்காக கீறியது)
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
பெரிய தக்காளி - 4 (நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கல்லுப்பு - 1 டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப)
அரிசி - 1 கப்
தண்ணீர் - 2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
நெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, சோம்பு, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை அரை நிமிடம் வதக்கவும்.
நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.
மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் மற்றும் கல்லுப்பு சேர்த்து, மசாலா வாசம் வரும் வரை நன்கு வதக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தும் சுருண்டு வதங்கி வர வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். அத்துடன் ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்க்கவும். நன்கு கிளறி, உப்பு சரிபார்த்துக்கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, கலவை கொதிக்க ஆரம்பித்ததும், அரிசியைச் சேர்க்கவும். குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து மேலும் ஒரு விசில் விடவும். குக்கரில் பிரஷர் முழுவதுமாக குறைந்ததும், மூடியைத் திறந்து, நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து கிளறி இறக்கவும். சுடச்சுட தேங்காய்ப்பால் தக்காளி சாதம் தயார்!