இன்னும் ஒரே ஒரு வாய் சாதம் போட்டுப் பிரட்டிச் சாப்பிடலாமா என்று தோன்றுகிறதா? கத்திரிக்காய் பச்சடியை சாதத்தில் போட்டுப் பிரட்டி, வயிறு முட்டச் சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது. அந்த ரெசிபியை எப்படிச் செய்வது என்று பார்ப்போம், வாங்க.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
வரமிளகாய் - 8-10
தனியா - 10 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
புளி - 2 கோலிக்குண்டு அளவு
கல்லுப்பு - தேவையான அளவு
கத்திரிக்காய் - கால் கிலோ
கொத்தமல்லி - கால் கட்டு
கடுகு
பெருங்காயத்தூள்
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, 8-10 வரமிளகாயைப் போட்டு வறுக்கவும். அதனுடன் 10 டேபிள்ஸ்பூன் தனியாவைப் போட்டுப் பிரட்டி எடுக்கவும். பிறகு, 2 டேபிள்ஸ்பூன் சீரகம், 2 பெரிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். இப்பொழுது, 2 தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.
இதனுடன், 2 கோலிக்குண்டு அளவு புளியும், தேவையான அளவு கல்லுப்பும் சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். இது ஆறட்டும். அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கால் கிலோ கத்திரிக்காயைப் போட்டு சற்று மென்மையாக வதக்கவும்.
கால் கட்டு கொத்தமல்லி சேர்த்து சுருள வதக்கி, அடுப்பை அணைத்து விடவும். இப்போது, மிக்ஸர் ஜாரில் நாம் வதக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி கலவையைப் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து, இதனுடன் கத்திரிக்காய், கொத்தமல்லி கலவையைப் சேர்த்து இரண்டு முறை அடித்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிப்பு கடாயில் எண்ணெய், வரமிளகாய், கடுகு போட்டுப் பொரிந்ததும், பெருங்காயத்தூள், தட்டி வைத்த 10 பல் பூண்டு, பொடியாக நறுக்கிய 10 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். கறிவேப்பிலை சேர்த்ததும், தாளிப்பை பச்சடியில் சேர்த்து கலந்தால் கத்திரிக்காய் பச்சடி தயார்!