பரோட்டாவுடன் சேர்த்துச் சாப்பிட பலருக்கும் பிடித்தது கெட்டிச் சால்னா. இந்தச் சால்னாவை வீட்டிலேயே எளிய முறையில் எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 10-12 பற்கள்
பச்சை மிளகாய் - 2-3
கொத்தமல்லி தழை - சிறிது
தக்காளி - 2
சிக்கன் - 250 கிராம்
மல்லி விதை - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிமசால் பட்டை - 1 துண்டு
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில், ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, சின்ன வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். இது சால்னாவுக்கு தனி சுவையைக் கொடுக்கும். அதே கடாயில், ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, மல்லி விதை, மிளகு, சோம்பு, சீரகம், கறிமசால் பட்டை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்கவும்.
இத்துடன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி, சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். இப்பொழுது, ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் சேர்த்து, சோம்பு, கறிமசால் பட்டை போட்டு தாளிக்கவும். பின்னர், நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
இதனுடன் தக்காளி மற்றும் சுத்தம் செய்து வைத்த சிக்கன் (அசைவம் விரும்பாதவர்கள் காய்கறிகளைச் சேர்க்கலாம்) சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின்னர், அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2-3 விசில் வரும் வரை வேகவிடவும்.
குக்கரில் இருந்து ஆவி அடங்கியதும், ஒரு அகன்ற பாத்திரத்தில் மாற்றி, எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். இப்பொழுது சுவையான, கெட்டியான சிக்கன் சால்னா பரோட்டாவுடன் சேர்த்துப் பரிமாறத் தயாராக இருக்கும். இதை நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்!