காலை செய்த தோசை மாலை ஆனதும் காய்ந்து போய் தூக்கி எறியும் நிலைமை ஏற்படுவதுண்டு. ஆனால், அந்த மிச்சமான தோசையை வைத்து போட்டி போட்டு சாப்பிடும் அளவிற்கு ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மீதமிருக்கும் தோசை - 3
வேர்க்கடலை - 50 கிராம்
பொட்டுக்கடலை – 50 கிராம்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில், காய்ந்த தோசைகளை சிறிய துண்டுகளாக கத்தரிக்கோல் கொண்டு வெட்டிக்கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்குங்கள். எண்ணெய் காய்ந்ததும், வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே ஒரு டிஷ்யூ பேப்பரில் மாற்றுங்கள்.
அதே எண்ணெயில், பொட்டுக்கடலையை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு, வெட்டி வைத்துள்ள தோசைத் துண்டுகளை சேர்த்து அடுப்பை அதிக தீயில் வைத்து பொரித்து எடுங்கள். தோசைத் துண்டுகள் எண்ணெய் குடிக்காது.
பொரித்த தோசைத் துண்டுகள் நன்றாக ஆறிய பின், ஒரு கலக்கும் பாத்திரத்தில் மாற்றுங்கள்.
அதில், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறுங்கள். இப்போது, சுவையான தோசை ஸ்நாக்ஸ் தயார். இதை மாலை நேரங்களில் டீயுடன் சேர்த்து சாப்பிடும்போது சுவை இன்னும் அதிகரிக்கும்.