மனிதனின் உடல் சராசரியாக இயங்குவதற்கு, இரும்புச்சத்து அவசியமான ஒன்று. தினமும், கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கிறது. இதில் முக்கியமான கீரை அரைக்கீரை. உடலில் ஏற்படும், சாதாரண சளி, இருமலில் தொடங்கி, கண்பார்வை மங்குதல். கண் குத்துதல் உள்ளிட்ட பல பிரச்னைகளை தீர்க்கும் சக்தி அரைக்கீரைக்கு உண்டு.
கண் சார்ந்த பிரச்னைகளை தீர்க்கும் திறன் கொண்ட அரைக்கீரை, பசியின்மையை போக்கும். வாரத்தில் 2-3 முறை அரைக்கீரையை பொறித்தோ அல்லது, கடைந்தோ சாப்பிட்டு வந்தால், பசியுணர்வை தூண்டும். உடல் வலி இருப்பவர்கள், அரைக்கீரையில், சீரகம், மிளகு இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், உடல் வலி நீங்கி உடல் ஆரோக்கியமாக மாறும்.
இந்த அரைக்கீரையில் வடை செய்து சாப்பிடலாம். அதை எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
உளுந்து – கால் கப்
கடலைப்பருப்பு – ஒரு கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 2 கப்
வெங்காயம் – 2
சிறு கீரை – அரைக்கட்டு
எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை 2 மணி நேரத்திற்கு மேல் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைத்து எடுத்த மாவில், சீரகம், சோம்பு, தட்டிய பூண்டு, துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கீரைக்கட்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.
இந்த மாவை நன்றாக கையில் தட்டி எடுத்து, சூடான எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான கீரை வடை தயார்.