மாலை நேர பசிக்கு சட்டென செய்யக்கூடிய, அதே சமயம் சுவையான ஒரு நொறுக்குத்தீனியைத் தேடுகிறீர்களா? வீட்டில் மீந்துபோன தோசை மாவை வைத்து சில நிமிடங்களில் ஒரு அசத்தலான பிரட் டோஸ்ட் எப்படி செய்வது என்று பார்ப்போம்!
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
நறுக்கிய பச்சை மிளகாய் - 1-2 (காரத்திற்கு ஏற்ப)
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பிரட் ஸ்லைஸ்கள் - தேவைக்கேற்ப (வெள்ளை பிரட் அல்லது பிரவுன் பிரட்)
நெய் / எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள தோசை மாவை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இப்போது, ஒரு தோசைக்கல்லை சூடாக்கி, அதில் சிறிது நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிரட் துண்டுகளில் ஒரு பக்கத்தில், தோசை மாவு கலவையில் நன்கு தோய்த்து எடுக்கவும். மாவு பூசப்பட்ட பிரட் துண்டுகளை சூடான தோசைக்கல்லில் மெதுவாக வைக்கவும். மற்றொரு பக்கத்திலும் தோசை மாவு கலவையைத் தடவி, அதன் மேல் சிறிது மிளகாய்த்தூளைத் தூவவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் பொன்னிறமாக, மொறுமொறுவென்று ஆகும் வரை சுடவும். தேவைப்பட்டால், மேலும் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளலாம். சுட்டவுடன், சூடான தோசை மாவு பிரட் டோஸ்ட்டை அப்படியே பரிமாறவும். அவ்வளவு தான் தேசைமாவு ப்ரெட் ரோஸ்ட் தயார்.