ஒவ்வொரு மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும் உணவு ஒரு இன்றியமையாத தேவை. தமிழ்நாட்டில் பெரும்பாலும் இட்லி தான் காலை உணவாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்த இட்லிக்கு, சாம்பார், வகை வகையான சட்னிகள் இருந்தாலும், இட்லி மிளகாய் பொடி தொட்டு சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படி அனுபவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மாதிரி ஒரு இட்லி மிளகாய் பொடி செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வெள்ளை எள்ளு – கால் கப்
கடலைப்பருப்பு – கால் கப்
உளுத்தம் பருப்பு – அரை கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கட்டு
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கட்டி பெருங்காயம் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 15
செய்முறை
முதலில் வெள்ளை எள்ளு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு மிளகு, சீரகம் ஆகிய இரண்டையும் ஒன்றாக வறுக்கவும். அதனுடன் கருவேப்பிலை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
இவற்றை வறுக்கும்போது எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். தீய்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பானில் எண்ணெய் விட்டு, அதில், கட்டி பெருங்காயம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
இதன்பிறகு மிளகாய் முதலில் மிக்ஸியில் போட்டு அரைத்துவிட்டு அதனுடன் வறுத்த மற்ற பொருட்களை சேர்த்து 2 நிமிடம் அரைத்து எடுத்துக்கொள்ளவும். சுவையான இட்லி மிளகாய் பொடி தயார். ஏர் கண்டைனரில் வைத்து பயன்படுத்தினால் இந்த பொடி ஒரு மாததத்திற்கு கெடாமல் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“