முருங்கைக்கீரை நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று. இதில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், சிலருக்கு கீரை கசக்கும் என்பதால் அதைத் தவிர்த்து விடுவார்கள். கீரையை சட்னியாக அரைத்துவிட்டால், அதன் சுவை அபாரமாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் இதைத் தொட்டுக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை – 1 கப்
மல்லி– 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் – 5-6
கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
புளி – ஒரு சிறிய துண்டு
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 2 பல்
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு:
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலியில் முருங்கைக்கீரையை சேர்த்து, கீரையின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். அதன்பிறகு அதில் தேங்காள் துருவலை சேர்த்து ஈரப்பதம் போகும்வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே வாணலியில், சிறிது எண்ணெய் விட்டு, மல்லி, சீரகம், வரமிளகாய், பூண்டு, பொட்டுக்கடலை, கடலைப்பருப்பு மற்றும் புளியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறியதும், மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு, வதக்கி வைத்த கீரை தேங்காய் துருவல் கலவையை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும்.
இறுதியாக, ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கிளறினால், சுவையான மற்றும் சத்தான முருங்கைக்கீரை சட்னி தயார்!