சிக்கன், மட்டன் சாப்பிட முடியாத சமயங்களில், வாய்க்கு ருசியான காளான் பிரியாணி செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் சுவையாக இருக்கும். நல்ல மணம் கமழும் இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
மஷ்ரூம் - 300 கிராம்
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 பெரியது (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (கீறியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடி
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 10-12
தயிர் - அரை கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கல்லுப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை மூடி
பிரியாணி மசாலாவுக்கு:
அன்னாசி பூ
கிராம்பு
ஏலக்காய்
பிரியாணி இலை
செய்முறை:
முதலில், இரண்டு கிளாஸ் பாஸ்மதி அரிசியை தண்ணீர் சேர்த்து நன்கு அலசி, பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் அன்னாசி பூ, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு நைசாக அரைத்து தனியாக வைக்கவும்.
அதே மிக்ஸி ஜாரில், ஒரு கைப்பிடி புதினா, ஒரு கைப்பிடி மல்லித்தழை, மற்றும் பத்து முதல் பன்னிரண்டு சின்ன வெங்காயம் சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்கு நைசாக அரைத்து தனியாக வைக்கவும். அகலமான பாத்திரம் அல்லது குக்கரில், இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து சூடாக்கவும். அதில் இரண்டு பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு டார்க் பிரவுன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும், இரண்டு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும். அதன்பின், இரண்டு பெரிய தக்காளி பழத்தையும், இரண்டு பச்சை மிளகாயையும் கீறி சேர்த்து, ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும், அரை கப் தயிர் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கலக்கவும். நாம் அரைத்து வைத்திருக்கும் பிரியாணி மசாலாவைச் சேர்த்து, 300 கிராம் மஷ்ரூமை பெரிய துண்டுகளாக வெட்டிச் சேர்த்து, நன்கு கலக்கவும். ஒரு டீஸ்பூன் கல்லுப்பு சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்கு கிளறிய பிறகு, நாம் அரைத்து வைத்துள்ள மல்லி புதினா விழுதைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து, 3 கிளாஸ் தண்ணீர் சேர்த்து (2 கிளாஸ் பாஸ்மதி அரிசிக்கு 3 கிளாஸ் தண்ணீர்), ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும், ஊற வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து, அரை எலுமிச்சை பழத்தின் சாற்றையும் பிழிந்து, நன்கு மெதுவாக கலக்கவும். தண்ணீரையும் அரிசியும் சமமாக வந்ததும், ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து, மூடி போட்டு, 15 நிமிடங்கள் குறைவான தீயில் “தம்” போடவும். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து, ஐந்து நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால், மிகவும் சுவையான, மணம் கமழும் காளான் பிரியாணி சூப்பராக தயாராக இருக்கும்!