மாலை நேரச் ஸ்னாக்ஸ் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது பக்கோடாதான். மொறுமொறுப்பான, காரசாரமான பக்கோடா பிரியர்களுக்கு, காலிஃப்ளவர் பக்கோடா ஒரு அருமையான தேர்வு. இந்த எளிய செய்முறையைப் பின்பற்றி, வீட்டிலேயே சுவையான காலிஃப்ளவர் பக்கோடாவை எளிதாகத் தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளோர் மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்து வெந்நீரில் கழுவி எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு செய்வதால், காலிஃப்ளவரில் உள்ள பூச்சிகள் அல்லது கிருமிகள் நீங்கிவிடும். அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, அரிசி மாவு, கார்ன்ஃப்ளோர் மாவு, கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசையவும்.
இந்த மாவு கலவையுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மாவு மிகவும் நீர்த்துப் போகாமல், கெட்டியாக இருக்க வேண்டும். எலுமிச்சை சாற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து காலிஃப்ளவர் பூக்களை சேர்த்து, மாவு எல்லா இடங்களிலும் பரவும்படி மெதுவாகப் புரட்டி எடுக்கவும்.
மசாலா கலந்த காலிஃப்ளவரை 1 மணி நேரம் வரை ஊறவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், மசாலா கலந்த காலிஃப்ளவர் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார்! இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாஸ், சட்னியுடன் சேர்த்துப் பரிமாறலாம்.