தென்னிந்தியாவின் பாரம்பரிய காலை உணவு வகைகளில் ஒன்று ஆப்பம். தேங்காய்ப் பாலுடன் பரிமாறப்படும் பஞ்சு போன்ற ஆப்பத்தின் சுவைக்கு ஈடு இணை இல்லை. ஆனால், சரியான பதம் மற்றும் சுவையுடன் ஆப்பம் தயாரிப்பது ஒரு கலை. நீங்கள் வீட்டிலேயே சுவையான மற்றும் மென்மையான ஆப்பம் தயாரிக்க உதவும் எளிய, ஆனால் பயனுள்ள குறிப்புகளைப் பார்க்கலாம்.
அப்ப மாவு அரைக்க:
1 1/4 கப் இட்லி அரிசி
1 1/4 கப் பச்சரிசி
அரை கப் உளுந்து
1 டீஸ்பூன் வெந்தயம்
இவற்றைச் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். நான்கு மணிநேரம் ஊறவைக்கவும். ஊறியதும் கிரைண்டரில் சேர்த்து அரைக்கவும். இத்துடன் 1 கப் வடித்த சாதமும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாவு அரைத்ததும், இத்துடன் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
இரவு முழுவதும், அதாவது சுமார் 8 மணிநேரம் மாவை புளிக்க வைக்கவும். மாவு நன்கு புளித்து வந்திருக்கும். இப்போது இதை நன்கு கலந்து அப்பம் ஊற்றலாம். அப்பச்சட்டி சூடானதும், மாவை ஊற்றி, ஒரு மூன்று நிமிடம் மூடி போட்டு வேகவைத்தால், சூப்பர் சுவையில் பஞ்சு போன்ற அப்பம் தயாராகிவிடும். இதை நிச்சயம் முயற்சித்துப் பாருங்கள், சுவை அருமையாக இருக்கும்.