நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்தக் கொள்ளுப் பருப்புப் பொடியைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயுடன் இட்லி, தோசை, சாதம் இவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டு வரும்போது, நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, உடல் எடை குறைந்து நீங்கள் ஸ்லிம்மாக மாற இது மிகவும் உதவும்.
இது எடையிழப்பிற்கு மட்டுமல்ல; இதில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தக் கொள்ளுப் பருப்புப் பொடியை எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம். ஒரு கப் கொள்ளு எடுத்து, கடாயில் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து நிறம் மாறியதும், இதை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.இத்துடன் அரை கப் கருப்பு உளுந்து சேர்த்து, இதையும் வாசனை வரும்வரை வறுத்து, காரத்திற்கு ஏற்றவாறு, காம்புடன் கூடிய காய்ந்த மிளகாயைச் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். (நெடி அதிகமாக இருக்கும். அரைக்கும்போது காம்பை நீக்கிவிடவும்.)
இரண்டு கைப்பிடி கறிவேப்பிலையையும் சேர்த்து, நன்றாக மொறுமொறுவென வரும்வரை வறுத்து, அதையும் ஆற வைத்துக் கொள்ளுங்கள். கால் கப் கடலைப்பருப்பு எடுத்து அதையும் நன்றாக வாசனை வரும்வரை சிவக்க வறுத்து, அதையும் ஒரு தனி தட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு கட்டி பூண்டு (சிறு எலுமிச்சை அளவு), ஒரு சிறு எலுமிச்சை அளவு புளி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அடுப்பை அணைத்துவிட்டு, கடாயின் சூட்டிலேயே லேசாக வறுத்து விடுங்கள்.
இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை, ஒரு ஸ்பூன் போட்டு சாப்பிட்டுப் பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவராக இருந்தால், உங்கள் அம்மாவிடம் சொல்லி இதைத் தயார் செய்து எடுத்துச் செல்லுங்கள். கொஞ்சமாகப் போட்டாலும் நிறையப் பொடி கிடைக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைப்பதற்கு இந்தப் பருப்புப் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.