சமையலில் நாம் எத்தனையோ வகைகளைச் செய்தாலும், நாட்டுக்கோழி குழம்புக்கு என்றுமே தனி இடம் உண்டு. அதன் மணம், சுவை, மற்றும் பாரம்பரியமான செய்முறை என அனைத்தும் உண்பவர்களை எப்போதும் ஈர்க்கும். கிராமத்து வீடுகளில் அடுப்பில் வைத்து பொறுமையாக சமைக்கும் நாட்டுக்கோழி குழம்பின் வாசம் நினைத்தாலே நாக்கில் நீர் ஊறுகிறது. சுவை மிகுந்த நாட்டுக்கோழி குழம்பை, வீட்டிலேயே எளிதாக எப்படிச் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மசாலா அரைப்பதற்கு:
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
மல்லி விதைகள் - 3 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
முந்திரி - 8
காஷ்மீரி மிளகாய் - 4
கறிவேப்பிலை - 10 இலைகள்
இஞ்சி, பூண்டு
பெரிய வெங்காயம் - 2
குழம்பு தாளிப்பதற்கு:
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
பட்டை - 2
அன்னாசி பூ - 1
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
நாட்டுக்கோழி - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
அரைத்த மசாலா விழுது - 1 கப்
தண்ணீர் - 1 கப்
தேங்காய்ப் பால் - 1 கப்
கறிவேப்பிலை - 10 இலைகள்
செய்முறை
முதலில் மசாலா அரைக்க, ஒரு மண் சட்டியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, 2 பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பின்னர், இந்தக் கலவையை ஆறவைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது, குழம்பு செய்ய மற்றொரு மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, பட்டை, அன்னாசிப்பூ போட்டு தாளிக்கவும். தாளித்ததும், ஒரு கைப்பிடிச் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு சிக்கனை சேர்த்து, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, தக்காளி குழைந்து வரும் வரை வதக்கவும்.
பிறகு, நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து, பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்குங்கள். தேவையான அளவு தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்து, நன்றாகக் கலக்கி விடுங்கள். குழம்பை சுமார் 20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். குழம்பு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள்.
இப்போது, காரசாரமான மற்றும் மண்சட்டியில் சமைத்த அசத்தலான கொங்கு நாட்டு ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு தயார்! இது, உதிரி உதிரியாக வடித்த சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.