தமிழ்நாட்டின் மற்ற சிக்கன் உணவுகளில் மிகவும் ஃபேமஸ் ஆனது பள்ளிப்பாளையம் சிக்கன். இந்த உணவை சமைக்கும்போது, மிளகாய் தூள், மசாலா பொடிகள், தக்காளி மற்றும் கரம் மசாலா பயன்படுத்த வேண்டாம். பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களும் இதில் சேர்ப்பதில்லை. இதனுடைய சிறப்பு மிளகாயும், சின்ன வெங்காயமும் தான். இதோ, பள்ளிப்பாளையம் சிக்கன் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 20 (தோலுரித்து இரண்டாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 10 (விதை நீக்கியது)
தேங்காய் துண்டுகள் - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கவும். அதன்பிறகு, சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
சிக்கன் சிறிதளவு வெந்ததும், தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிக்கன் நன்கு வெந்து பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுத்து,கடைசியாக, கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான பள்ளிப்பாளையும் சிக்கன் ரெடி.