வீட்டிலேயே ஹோட்டல் தரத்திலான பிரான் கீ ரோஸ்ட் செய்வது எப்படி என்று யோசிக்கிறீர்களா? கவலையை விடுங்கள்! குறைந்த நேரத்தில், மிக எளிமையான முறையில் ஒரு அட்டகாசமான பிரான் கீ ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதன் தனித்துவமான சுவையும், கமகம வாசனையும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும்.
தேவையான பொருட்கள்
காஷ்மீரி மிளகாய், வரமிளகாய், முந்திரி - தேவையான அளவு
மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, கசகசா - தலா 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு - சிறிதளவு
ஊறவைத்த புளி - சிறிதளவு
இறால் - 250 கிராம்
நெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில், காஷ்மீரி மிளகாய், வரமிளகாய் மற்றும் முந்திரியைச் சூடான தண்ணீரில் சுமார் 30 நிமிடம் ஊறவையுங்கள். அடுத்து, ஒரு கடாயில் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, கசகசா ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து, மிக்ஸி ஜாரில் போடுங்கள்.
இப்போது, ஊறவைத்த மிளகாய், முந்திரி கலவையுடன் இஞ்சி, பூண்டு, மற்றும் புளியைச் சேர்த்து, வறுத்து வைத்த மசாலாவுடன் நன்றாக மையாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி சூடாக்குங்கள். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடுங்கள்.
பின்னர், சுத்தம் செய்து வைத்த இறாலைச் சேர்த்து, மிதமான தீயில் நல்லா ரோஸ்ட் செய்து தனியாக எடுத்து வையுங்கள். அதே கடாயில், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். பிறகு, அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்குங்கள்.
மசாலா வதங்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது, ஏற்கனவே வறுத்து வைத்த இறாலைச் சேருங்கள். இறாலின் மீது மசாலா முழுவதும் படியுமாறு நன்றாகப் புரட்டி எடுங்கள். இரண்டு நிமிடங்கள் கிளறினால் போதும். அவ்வளவுதான்! இப்போது சுவையான மற்றும் காரசாரமான பிரான் கீ ரோஸ்ட் தயார்.