நீங்கள் வேர்க்கடலை சட்னி சாப்பிட்டிருப்பீர்கள், உடைத்த கடலை சட்னி சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், தேங்காய் சேர்க்காமல், வேர்க்கடலையையும் உடைத்த கடலையையும் சேர்த்து ஒரு சூப்பரான காரசாரமான சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாமா? இது இட்லி, தோசை, பூரி, பஜ்ஜி, போண்டா என அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள முதல் சாய்ஸாக, மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் - 2-3 (உங்கள் காரத்திற்கு ஏற்ப)
வேர்க்கடலை - 1 கைப்பிடி
உடைத்த கடலை (பொட்டுக் கடலை) - 1 கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
சமையல் எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில், ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாயை வதக்கிக்கொள்ளவும். மிளகாய் சற்று நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். வதக்கிய பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
அதே ஜாரில், ஒரு கைப்பிடி வேர்க்கடலை, ஒரு கைப்பிடி உடைத்த கடலை, நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, நைஸாக அரைத்து எடுக்கவும்.
தாளிப்பதற்கு, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னி மேல் ஊற்றவும். அவ்வளவுதான்! தேங்காய் இல்லாத சுவையான வேர்க்கடலை மற்றும் உடைத்த கடலை சட்னி தயார். இதை சூடான இட்லி, தோசை, பூரி போன்றவற்றுடன் பரிமாறவும்.