உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத பயனை தரும் இயற்கை உணவுகளில் முருங்கை கீரைக்கு முக்கிய இடம் உண்டு. முருங்கை மரத்தின் இலை, பூ, காய் அனைத்துமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது. குறிப்பாக உடலுக்கு இரும்புச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் முருங்கை கீரைக்கு உண்டு.
இரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் முருங்கை கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அதேபோல் தொண்டை வலி, சளி இருமல், உள்ளிட்ட பல தொற்று நோய்களையும் போக்கும் திறன்கொண்ட முருங்கை கீரையை சூப் வைத்து சாப்பிடும்போது அதிக நன்மைகள் தரும்.
இயற்கை வைத்தியத்தில் முக்கிய பங்காற்றும் முருங்கை சூப் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள் :
முருங்கை இலை – 1 1/2 கப்
அரிசி கழுவிய தண்ணீர் – 2 கப்
சின்ன வெங்காய்ம் – 5
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
தேங்காய் பால் – 1 கப்
சீரகம் – 1 டிஸ்பூன்
மிளகு – அரை டிஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் அரிசி கழுவிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து முருங்கை இலையை அதனுடன் சேர்க்க வேண்டும். முருங்கை இலை தண்ணீரில் நன்றாக கலந்தவுடன், சிறிது நேரம் கழித்து வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
முருங்கை இலை நன்றாக வெந்தவுடன், அதில் தேங்காய்பால், மிளவு மற்றும் சீரகத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதித்தவுடன் அதனை இறக்கி வைத்துவிட வேண்டும்.
அடுத்து இதை தாளிக்க அடுப்பில் கடாய் வைத்து அதில், எண்ணெய் சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கீரையில் கொட்டவும். அதன்பிறகு நன்றாக கலக்கி விட்டு அதனை சாப்பிடலாம். இந்த முறையில் முருங்கை கீரை சூப் சாப்பிடும் போது நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் (பி.பி)உள்ளிட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்தும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil