உடல் ஆரோக்கியத்திற்கு என்று சொல்லி சொல்லியே பல உணவுகளை நாம் ஒதுக்கி விடுகிறோம். உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் அதனை தவிர்த்து வருகிறோம். உடல் நலனில் அக்கறை கொண்டிருப்பவர்களை பயமுறுத்தும் ஒரு விஷயம் கொழுப்பு. இதில் கொழுப்பு அதிகம் என்று சொன்னாலே வாழ்நாள் முழுக்க அந்த உணவுப்பக்கமே செல்லாத அளவிற்கு கொழுப்பின் மீது அதீத பயம் உண்டு நமக்கு.
பால் பொருட்களில் சுவையானதும் அதே போல வாசமும் கொண்டது நெய். வெண்ணெய்யை உருக்கி செய்யப்படும் நெய் சாப்பிடக்கூடாது அது கொழுப்பு என்று ஒரங்கட்டப்படுகிறது. அப்படி ஓரங்கட்டத் தேவையில்லை. நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைப்பதால் நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தான் உண்மை.
நெய்யில் நிறைந்துள்ள நன்மைகள்
நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால் நல்லது. நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்க வைட்டமின்கள் உள்ளன. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம்.
நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். நெய்யானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும்.
வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும்.
தற்போதுள்ள உணவுமுறை மாற்றத்தால் பலர் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள் இதற்கு உள்ளாவார்கள். ஆகவே இப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, 1 டேபிள் ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் உடனே தணியும்.
கண்களை ஒளிபெறச் செய்கிற திறன் நெய்யில் உள்ளது. கண் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களும், கண் பார்வையை அதிகரிக்கவும், தொடர்ந்து நெய் சாப்பிடலாம்.
உடலுக்கு வலுவையும் பொலிவையும் தந்து நோய் பலவற்றிலிருந்து காக்க வல்லது. நினைவாற்றலையும், வாழ்நாளையும் உயர்த்தவல்லது. இன்றியமையாத கொழுப்பு அமிலமான லினோலிக் அமிலம் நெய்யில் 4 – 5% வரை காணப்படுகிறது. இது ஒழுங்கான உடல் வளர்ச்சிக்குத் துணை புரிகிறது.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது. நெய்யில் இருக்கும் விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை உடலில் இரத்தத்ததை சுத்தப்படுத்தி இரத்த சுழற்சியை மேம்படுத்தும்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்து விடும்.
நெய் சாப்பிட்டவுடன் கொழுப்பாக உடலில் தங்குவதில்லை மாறாக எனர்ஜியாக எரிக்கப்படுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது. முக்கியமான குறிப்பு அளவோடு சாப்பிடுங்கள். பசும் நெய்யாக வாங்கி சாப்பிடுங்கள்.
மருத்துவர் முத்துக்குமார்.
சித்தமருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
9344186480
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“