சிறு தானிய உணவு வகைகளில் முக்கியமானது குதிரைவாலி. புல்லுச்சாமை என்று அழைக்கப்படும் இந்த உணவில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. பாரம்பரிய உணவுகளில் முக்கியமான தானியாக கருதப்படும் இந்த குதிரைவாலி, அதிகமான புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் அதிகப்படியாக இரும்புச்சத்து நிறைந்தது.
இந்த குதிரைவாலி உணவை எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும். சர்க்கரை நோய் இருப்பது உறுதியானால், அவர்கள் அரிசி சாதத்திற்கு பதிலாக கோதுமையில் தயாராகும் உணவை அதிகம் சாப்பிட வேண்டிய நிலை வரும். ஏனென்றால் , அரிசியை விட, கோதுமையில், அதிகமான அளவு நார்ச்சத்து இருக்கிறது. ஆனால் கோதுமையை விட குதிரைவாலியில் 6 மடங்கு நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
மேலும் மற்ற சிறுதானியங்களை விடவும் அதிகமான அளவு நார்ச்சத்து குதிரைவாலியில் உள்ளது. இந்த நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும். இதனால் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் தினமும் ஒரு வேளையாவது குதிரைவாலி உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல் மாரடைப்பு வராமல் தடுக்கவும் குதிரைவாலி உணவு பெரிய நன்மை செய்யும். ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து அடைப்பு ஏற்படுவதால், மாரடைப்பு ஏற்படுகிறது.
குதிரைவாலியில் இருக்கும் 2 வகையான நார்ச்சத்து இந்த கொழுப்பு படிவதை தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்க ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து அவசியம்.இந்த இரு சத்துக்களும் அதிக அளவில் இருக்கும் சிறுதானியம் குதிரைவாலிதான். அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், இந்த குதிரைவாலி உணவை எடுத்துக்கொள்ளும்போது பெரும் பயன் அடைவார்கள்.
அதேபோல் செரிமான பிரச்சனைகளை தடுக்கவும் குதிரைவாலி உதவுகிறது. ரத்தசோகை வராமல் தடுக்கும். இரத்தத்தில் இரும்புச்சத்து குறையும்போது ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. குதிரைவாலியில் அதிகளவு இரும்புச்சத்து இருப்பதால், தினமும் இதை சாப்பிடும்போது உடலில் இரும்புச்சத்து அதிகரித்து ரத்தசோகை நோய் ஏற்படாமல் தடுக்கும். உடல் எடையை குறைக்கவும், மலச்சிக்கல் வராமல் தடுக்கவும், நாள்பட்ட நோய்கள் வராமல் தடுக்கவும், உணவு ஒவ்வவொமை பிரச்சனைகளை சரி செய்யவும் குதிரைவாலி உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “