நமது உடலில், உள்ளுறுப்புகள் சிறப்பாக இயங்குவதற்கு சத்தான உணவு எடுத்துக்கொள்வது அவசியம். எவ்வளவு தான் உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொண்டாலும், வாயு தொல்லை, உள்ளிட்ட பிரச்னைகள் நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. பொது இடங்களில், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது இந்த பிரச்சையினால், சிக்கலை சந்திக்கும் நிலையும் ஏற்படும்.
இந்த பிரச்னையை எப்படி போக்குவது என்பது பலரின் கேள்வியாக இருக்கும். அப்படி இருப்பவர்களுக்கு டாக்டர் ஜென்சி தீர்வு கூறியுள்ளார். அவர் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம். அதிகப்படியான காற்றை விழுங்குவதே வாயு தொல்லைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. வேக வேகமாக சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் படுத்துவிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது, சாப்பிட்டவுடன், செரிமானத்திற்காக பழங்கள் சாப்பிடுவது இதெல்லாம் தவறானது.
அதுபோல் சுவிங்கம் உள்ளிட்ட சில பொருட்களை வாயில் போட்டு மென்றுகொண்டே இருப்பதால் அதிகப்படியாக காற்று உடலுக்குள் செல்கிறது. இந்த மாதிரி உள்ளே செல்லும் காற்று, நமது உணவுக்குழாய், வயிற்று பகுதியில் அதிகப்படியாக தங்கிவிடுகின்றன. இந்த காற்று தான் ஏப்பமாக வெளியில் வருகிறது. அதேபோல் நாம் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருந்தாலும் வாயு தொல்லை ஏற்படும். பொதுவாக உணவு செரிமானம் ஆவதற்கு ஹைட்ரோ குளோரிக் ஆசிட் தேவைப்படுகிறது.
அதிகப்படியாக உணவு எடுத்துக்கொண்ளும்போது, சீக்கிரமாக செரிமானம் ஆக வேண்டும் என்பதற்காக, ஜெலிசில் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வோம். அதிகப்படியான காரம் மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது, இவை அனைத்தும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சுரப்பதை பாதியாக குறைக்கிறது. இதனால் நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும். இதன் காரணமாகத்தான், ஏப்பம் மற்றும் வயிறு உப்பசம் போன்ற பிரச்னைகள் வருகிறது.
காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, ஒரு டம்ளர் வெந்நீரில், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தபின் 5 நிமிடங்கள் கழித்து உங்களுக்கு ஏப்பம் வந்தால், உங்களுக்கு ஹைப்பர் அசிடிட்டி இருக்கிறது என்று அர்த்தம். 5 நிமிடங்கள் ஆகியும் ஏப்பம் வரவில்லை என்றால் உங்களுக்கு ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சுரப்பது கம்மியாக இருக்கிறது என்று அர்த்தம். இதன் மூலம் நீங்கள், உங்கள் உடலில் வாயு தொல்லை எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
வாயு தொல்லை இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் பெருங்காய தூள் ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை கொதித்து இறக்கியவுடன், இளம் சூட்டில், அரை டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு அரைமணி நேரத்திற்கு பின் குடித்து வந்தால் வாயு தொல்லை நீங்கும் என்று கூறியுள்ளார்.