இந்தக் கருவாட்டுத் தொக்கை நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும். இது ஒன்று போதும், வேறு எந்தக் கூட்டு, பொரியல், குழம்புமே தேவையில்லை. ஒரு தட்டு சாதத்திற்கு இந்தத் தொக்கு சிறிதளவு போதும், மொத்த தட்டும் காலியாகிவிடும். நல்ல காரசாரமான கருவாட்டுத் தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு, சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 3 (மெல்லியதாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 2 (நடுவில் கீறியது)
பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
கருவாடு - தேவையான அளவு (அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்தது)
உப்பு - 1/2 டீஸ்பூன் (தேவைக்கேற்ப)
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து நன்கு பொரிய விடவும். கடுகு, சீரகம் பொரிந்ததும், மெல்லியதாக நறுக்கிய மூன்று பெரிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு, ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் நடுவில் கீறிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் சுமார் 20% வதங்கிய பிறகு, நறுக்கிய இரண்டு பெரிய தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும், ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் தனியா தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர், அரை கப் தண்ணீர் ஊற்றி, கலவையை நன்கு கொதிக்க விடவும். கலவை நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது, அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்த கருவாட்டையும், அரை டீஸ்பூன் உப்பையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். கருவாடு, வெங்காயம், தக்காளியுடன் சேர்ந்து வெந்து, எண்ணெய் நன்கு பிரிந்து வரும்போது தொக்கு தயாராகிவிடும். இதைச் சுடச்சுட சாதத்துடன் பரிமாறலாம்.