உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். குறிப்பாக வெளியில் கிடைக்கும் ஃபார்ஸ்ட் புட் உணவுகளை விடவும், வீட்டில் செய்யப்படும் உணவுகளுக்கு மதிப்பு கொடுத்தாலே நமக்கு ஆரோக்கியமான உணவு கிடைத்துவிடும் என்று சொல்லலாம். அந்த வரிசையில் முட்டை மனிதனுக்கு மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக கூறப்டுகிறது.
முட்டை சைவமா? அசைவமா? இதில் வெள்ளைக்கரு நல்லதா அல்லது மஞ்சள் கரு நல்லதா? மஞ்சள் கரு சாப்பிடலாமா வேண்டாமா என்ற பல கேள்விகள் முட்டை மீது இருந்தாலும், பொதுவாக முட்டை என்பது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவு தான் என்று பலரும் சொல்கிறார்கள். அதே சமயம் முட்டையை விடவும், அதிக சத்து நிறைந்த உணவு பொருள் இருக்கிறது என்று டாக்டர் சிவராமன் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
வைட்டமின், புரதம், உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கிய கோழி முட்டையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானது. முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதச்சத்துக்கள் நமக்கு உடனடியாக பலன் கொடுக்கும். வளரும் குழந்தைகள், காலையில் பள்ளிக்கு செல்லும்போது, வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் காலை உணவாக முட்டை கொடுக்க வேண்டும். அதே சமயம் பச்சை முட்டை குடிப்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.
சில நோய் கிருமிகள், முட்டையில் இருந்தால், அதனை பச்சையாக குடிக்கும்போது நமது உடலுக்கு அந்த கிருமிகள் செல்லும் அபாயம் உள்ளது. அதனால் முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லேட் மாதிரி செய்தோ சாப்பிடுவது தான் சரியாக இருக்கும். வேக வைத்த முட்டையில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடனடியாக கிடைக்கும் திறன் உள்ளது. அதனால் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் உடலுக்கு பெரிய ஆரோக்கிய நன்மையாக இருக்கும்.
முட்டையின் மஞ்சள் கருவில், கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் அதில் உடலுக்கு தேவையான கொழுப்புகள் தான் இருக்கிறது. முட்டையை வேகவைத்து சாப்பிடும்போது, அதில் நல்ல கொழுப்பு சதவீதம் அதிகமாகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல் முட்டையில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ஆனால் கோழி முட்டையை விட காடை முட்டை, 6 மடங்கு சத்து அதிகம் உள்ளது. இந்தியாவில் பிரபலம் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் காடை மற்றும் அதன் முட்டை மிகவும் பிரபலம். கோழி முட்டையை விடவும் காடை முட்டை அதிகளவு சத்துக்கள் நிறைந்தது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “