/indian-express-tamil/media/media_files/2024/10/19/SiCAfBp7ZG1WGxBrokdz.jpg)
ஒரு காலகட்டத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்ற நிலைமை மாறி தற்போது பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் இந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் குறுகிய காலத்திலேயே அவர்களின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து பிரபல மருத்துவர் மகுடமுடி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவரை சந்தித்து கேட்டபோது, இளம் வயதில் இப்போது மாரடைப்பு அதிகமாக வருகிறது. இதை தடுக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். பெற்றோர்களின் நோக்கம் இப்போது பணத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களை வழிநடத்துகிறார்கள். அதனால் அவர்களுக்கு உடற்பயிற்சியே இல்லாமல் போய்விடுகிறது.
எல்.கே.ஜி படிக்கும்போது பள்ளியை விட்டு வந்தவுடனே பல டியூஷன்களுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். உணவுமுறையில் பெற்றோர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, பிள்ளைகளுக்கும் அதை தான் சாப்பிட வேண்டும் என்று சொல்ல வேண்டும். பெற்றோர், பரோட்டா, சில்லி, பானிப்பூரி என்று சாப்பிட்டால் பிள்ளைகளும் அதைதான் சாப்பிடுவார்கள். அதனால் பெற்றோர்கள் முதலில் மாற வேண்டும். புகைபிடிக்க கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதன் பாதகங்களை சொல்லி பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/10/dr-makudamudi-182742.jpg)
அதேபோல் தனது பிள்ளையின் நண்பர்கள் வட்டாரங்கள், எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆல்கஹால் குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கங்கள் வைத்திருக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இதில் இருக்கும் கெட்டதை சொல்லி, வாழ்க்கை ஒரு இன்னிங்ஸ் தான், எவ்வளவு மார்க் எடுத்து பெரிய பதவியில் இருந்தாலும், இளம் வயதில் மரணித்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
பிள்ளைகள் வளர்வதற்கு பெற்றோரே ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் சண்டை போட்டு பிள்ளைகளை டென்ஷன் ஆக்காமல், நமது பாரம்பரிய உணவு முறைகளை கடைபிடித்து அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வெண்டும். பிள்ளைகளை உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் பங்கேற்க வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.