சிறுவயதில் கிச்சன் ஸ்லாப்பில் அமர்ந்து அம்மா சமைப்பதைப் பார்த்தது நினைவிருக்கிறதா? நம்மில் பெரும்பாலோர் சமையல் கற்றுக்கொண்டது அப்படித்தான். இன்று, நாம் அதை வெவ்வேறு நவீன வழிகளில் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். அதில் ஆண், பெண் இரு பாலருக்கும் மிகவும் உதவியாக இருப்பது யூடியூப் தான். அதில் My Country Foods யூடியூப் சேனல் இணையத்தில் மிகவும் பிரபலம்.
இந்த சேனலில், வாழைப்பழமும், கோதுமை மாவும் வைத்து எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி எப்படி செய்வது என்பது குறித்த,சமையல் வீடியோ நிறைய பேரை கவர்ந்தது. அதுகுறித்து இப்போது பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கிலோ
வாழைப்பழம்- 2
எப்படி செய்வது?
முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீரை கொதிக்க விடவும். அதனுடன் சிறிது கல் உப்பு சேர்க்கவும்.
அரைகிலோ மாவுக்கு ஒரு பழம், ஒரு கிலோ மாவுக்கு 2 என வாழைப்பழம் எடுத்து, தோலை நீக்கி, பாத்திரத்தில் நன்றாக பிசைந்து கொள்ளவும். பூவம் வாழைப்பழம் இந்த சப்பாத்திக்கு நன்றாக இருக்கும். கனிந்த பழமாக இருந்தால், சப்பாத்தி இன்னும் உப்பி வரும்.
இப்போது அகலமான பாத்திரத்தில், வாழைப்பழத்தை நன்கு பிசைந்ததும், அதனுடன் ஒரு கிலோ கோதுமை மாவு சேர்க்கவும். ஏற்கெனவே கொதிக்க வைத்த வெந்நீர், லேசாக ஆறியதும், அதை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பிசையவும். மாவு பிசையும் போது தண்ணீர் அதிகம் விடாமல் பார்த்துக் கொள்ளவும். இந்த மாவை மூன்று மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
வாழைப்பழம் சேர்த்ததால், மாவு லேசாக கருப்பு நிறத்தில் தெரியும். ஆனால், சப்பாத்தி , பஞ்சு போல மிருதுவாக, ருசியாக இருக்கும்.
3 மணி நேரம் கழித்து, எப்போதும் போல, மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, அதன்மீது லேசாக கோதுமை மாவை தூவிக் கொள்ளவும்.
இப்போது சப்பாத்திக் கட்டையில் மாவு வைத்து, லேசாக மாவு தூவி, எவ்வளவு மெலிதாக வேண்டுமோ, அந்தளவுக்கு உருட்டி எடுத்துக் கொள்ளவும். இப்படி அனைத்து உருண்டைகளையும் உருட்டவும்.
இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும் மிதமான தீயில் வைத்து, உருட்டி வைத்த சப்பாத்தியை போடவும். இப்போது ஒரு காட்டன் துணியில் பொதிபோல செய்துக் கொண்டு, சப்பாத்தியின் இருபுறங்களும் நன்கு அமுக்கி விடவும். இப்படி செய்வதால், சப்பாத்தி நன்கு வெந்து பபுள்ஸ் போல அழகாக வரும்.
இப்படி அனைத்தையும் போட்டு எடுக்கவும்.
துளி எண்ணெய் கூட சுவையான சப்பாத்தி ரெடி..
என்ன! இன்னைக்கு இந்த சப்பாத்திய உங்க வீட்டுலயும் செய்ஞ்சு எல்லாரையும் அசத்துங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.