சிக்கன், மட்டன் சுக்கா செய்ய வேண்டும் என்று ஆசையா? ஆனால், பட்ஜெட் அதிகமாகிறதா? கவலையே வேண்டாம், ரூ. 50 மட்டும் செலவு செய்து வீட்டிலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான முட்டை சுக்கா எப்படி செய்வது என்று இந்தக் குறிப்பில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை,
மிளகு தூள்,
கரம் மசாலா,
கடலை மாவு,
எண்ணெய்,
சோம்பு,
வெங்காயம்,
கறிவேப்பிலை,
தக்காளி,
இஞ்சி - பூண்டு விழுது,
உப்பு மற்றும்
கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
முதலில் ஐந்து முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றிக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் மிளகு தூள், கரம் மசாலா தூள் மற்றும் சிறிதளவு கடலை மாவு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதையடுத்து, இந்த முட்டை கலவையை சிறிது எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி, இட்லி தட்டில் வேக வைக்க வேண்டும்.
முட்டை நன்கு வெந்த பின்னர், சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றவும். இதில் சோம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இதன் பின்னர் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு கலந்து மீண்டும் வதக்கவும்.
இவை நன்றாக வதங்கிய பின்னர், ஒரு கரண்டி கரம் மசாலா, தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். இதற்கடுத்து, சிறிதாக வெட்டி வைத்திருக்கும் முட்டையை இதில் சேர்த்து கலக்கலாம். இனி இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால், சுவையான முட்டை சுக்கா தயாராகி விடும்.