தமிழகம் மற்றும் கேரளாவின் பாரம்பரிய உணவுகளில் ஆப்பம் தனிச்சிறப்பு மிக்கது. மிருதுவான நடுப்பகுதியையும், மொறுமொறுப்பான ஓரங்களையும் கொண்ட ஆப்பம், வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் அறியப்படுகிறது. அரிசி மாவு, தேங்காய்ப் பால் சேர்த்து புளிக்க வைத்து செய்யப்படும் இந்த உணவு, காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது.
ஆப்பம், புளிக்க வைக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. புளிப்புச் செயல்முறை (fermentation) உணவில் உள்ள சத்துகளை எளிதில் செரிக்கக்கூடிய வடிவத்திற்கு மாற்ற உதவுகிறது. இதனால், இட்லி, தோசை போன்ற புளித்த மாவு உணவுகளை போலவே ஆப்பமும் செரிமான மண்டலத்திற்கு மிகவும் உகந்தது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஆப்பம் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - ஒரு கப்,
பச்சரசி - ஒரு கப்,
உளுந்து - கால் கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
தேங்காய்,
உப்பு - தேவையான அளவு,
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை மற்றும்
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு கப் இட்லி அரிசி, பச்சரசி, கால் கப் உளுந்து மற்றும் ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இவற்றுடன் தேங்காய் சேர்த்து மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும்.
அதன் பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஆறு மணி நேரத்திற்கு புளிக்க விட வேண்டும். அதற்கடுத்து, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா மற்றும் சிறிது தண்ணீர் விட்டு ஆப்பம் மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும்.
இவ்வாறு செய்த பின்னர், கல்லை சூடுபடுத்தி மாவு ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான ஆப்பம் தயாராகி விடும். இதற்கு மீன் குழம்பு, கடலை குருமா ஆகியவை அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.