சோளம் என்றாலே மக்காச்சோளம் தான் பலருக்கும் மனதில் தோன்றும். மக்காச்சோளம் என்பது புதிதாக உருவாக்கப்பட்ட வீரிய ஒட்டுரக சோளம் தான் எனவும், அவற்றில் பெரியளவில் பயன் தரக்கூடிய சத்துகள் இல்லை எனவும் மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
ஆனால், வெண் சோளம் என்று சொல்லக் கூடிய சிறு சோளத்தை தான் நம் முன்னோர்கள் நெடுங்காலமாக பயன்படுத்தி வந்ததாக சிவராமன் குறிப்பிட்டுள்ளார். சிறுசோளத்தை பழைய கால மக்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ள அவர், அவற்றில் அதிகளவில் புரதம் நிறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல், தும்மல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் தான். புரதச் சத்து குறைவாக இருப்பதால் நோயை எதிர்க்கும் சக்தி உடலில் அதிகளவில் காணப்படாது. அந்த வகையில் புரத சத்து நிறைந்த உணவுகளை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு நன்மை அளிக்கும்.
சிறுசோளத்தில் இயற்கையாகவே புரதச் சத்து அதிகளவில் உள்ளது. அதனால் தான் சிறுசோளத்தை நம் முன்னோர்கள் தினசரி உணவாக சேர்த்துக் கொண்டனர். ஆனால், தற்போது சிறுசோளத்தை கால்நடை தீவனங்களாக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்துவதாக சிவராமன் தெரிவித்துள்ளார். இத்தகைய சத்துகள் வாய்ந்த சிறுசோளத்தை நமது உணவில் எளிதாக சேர்க்கும் முறையை மருத்துவர் சிவராமன் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, தோசை மாவுடன், சிறு சோளத்தின் மாவை சேர்த்து தோசை சுட்டு சாப்பிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுசோள மாவு சேர்ப்பதால், அதிக எண்ணெய் சேர்க்காமலேயே தோசை மொறுமொறுவென்று வரும் எனக் குறிப்பிட்டுள்ள மருத்துவர் சிவராமன், இதனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் எனக் கூறியுள்ளார்.
மக்காச்சோளத்தை காட்டிலும் அதிக மருத்துவ பயன்கள் கொண்ட சிறுசோளத்தை நம் உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், தோல் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பவர்கள் சோள வகைகளை தவிர்த்து விடலாம் என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“