மதிய உணவுக்கு என்ன சமைப்பது என்று சிந்தப்பதே பெரிய வேலையாக இருக்கும். அது சத்தாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள் அதற்கு ஏற்றார் போல், முட்டை மல்லி சாதம் செய்முறையை காண்போம். முட்டையில் இருக்கும் புரதச் சத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துவதுடன், தசைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
தேவையான பொருட்கள்:
பூண்டு,
இஞ்சி,
மல்லி இலைகள்,
பச்சை மிளகாய்,
பட்டை,
கிராம்பு,
ஏலக்காய்,
முட்டை,
உப்பு,
மிளகாய் தூள்,
எண்ணெய்,
பெரிய வெங்காயம்,
மல்லி பொடி,
மஞ்சள் தூள் மற்றும்
சாதம்.
செய்முறை:
பூண்டு, இஞ்சி, ஒரு கைப்பிடி அளவு மல்லி இலைகள், ஆறு பச்சை மிளகாய், சிறிய துண்டு பட்டை, நான்கு கிராம்பு மற்றும் ஒரு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். தேவைப்பட்டால் இத்துடன் தண்ணீர் சேர்க்கலாம்.
இப்போது, நான்கு பச்சை முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கலாம். இனி அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
இதில் கலக்கி வைத்திருக்கும் முட்டையை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். பின்னர், முட்டையை தனியாக எடுத்து விடலாம். இனி, அதே கடாயில் மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். இதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
இப்போது, அரைத்து வைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மல்லி பொடி, மிளகாய் பொடி, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும். இதில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்த பின்னர், வடித்து வைத்திருக்கும் சாதத்தை இரண்டு கப் சேர்க்க வேண்டும்.
இறுதியாக வறுத்து வைத்த முட்டையை இத்துடன் சேர்த்தால், சுவையான முட்டை மல்லி சாதம் ரெடியாகி விடும். இது மதிய உணவிற்கு ஏற்ற ரெசிபியாக இருக்கும்.