உணவே மருந்து என்ற அடிப்படையில் தமிழர்கள் வாழ்ந்தனர். அவ்வாறு இருந்த வரை நிறைய நோய்களிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடிந்தது. குறிப்பாக, மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வந்தோம்.
ஆனால், தற்போதைய உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் விளைவாக பல்வேறு நோய்கள் உருவாகின்றன. இதனை தடுக்க சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். இதில் பூண்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாயுத் தொல்லையில் இருந்து விடுவிக்கக் கூடிய ஆற்றல் பூண்டில் இருக்கிறது. அதன்படி, பேச்சிலர்கள் கூட ஈசியாக செய்யும் வகையில் பூண்டு தொக்கு எப்படி தயாரிக்கலாம் என்று இந்த சமையல் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்,
கடுகு,
பூண்டு,
உப்பு,
மஞ்சள் தூள்,
தனி மிளகாய் தூள்,
புளி கரைசல்,
பெருங்காயம் மற்றும்
வெல்லம்.
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும். இத்துடன் கடுகு, இடித்து வைத்த பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இதன் பின்னர், போதுமான அளவு புளி கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கலாம்.
இதில், லேசாக பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்போது, எண்ணெய் பிரிந்து வரும் போது சிறிது வெல்லம் சேர்க்கலாம். இறுதியாக, ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கினால், சுவையான பூண்டு தொக்கு ரெடியாக இருக்கும்.
இதனை தனியாக ஒரு பாட்டிலுக்கு மாற்றிய பின்னர் மாதக்கணக்கில் வைத்து பயன்படுத்தலாம். இந்த பூண்டு தொக்கு அவ்வளவு எளிதாக கெட்டுப் போகாது. சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.